சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது : அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி..!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 4:19 pm

சென்னை : சசிகலா விவகாரத்தில் அதிமுக தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்று அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மகளிர் தினக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக மகளிர் நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கேக் வெட்டி வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:- அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் தொண்டர்கள் ஏற்றுள்ளனர் : சசிகலா தொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். இன்று உற்சாகத்துடன் அனைத்து மகளிரணி செயலாளர்களும் கலந்து கொண்டனர். ஜெயலலிதா காலம் முதல் மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடுகிறோம். மகளிரணியினர் மாவட்ட ஒன்றிய அளவிலும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

மகளிரணி அதிகம் உள்ள கட்சி அதிமுகதான். கட்சிக்காக சிறைச்சாலை சென்று முதல்குரல் கொடுத்தது மகளிரணிதான். அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி இயல்புதான். தோல்வி வெற்றிக்கான வழிகாட்டி. தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலும் தோல்வியை சந்தித்துள்ளோம்.

அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் இருக்கின்றனர். முடிவெடுக்கும்அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம், என்று கூறினார்.

மேலும் சசிகலா இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்து விடாதீர்கள். இதுபோன்ற விசயங்களில் link செய்து விடாதீர்கள். தலைமையின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவோம். 9 மாத திமுக ஆட்சி பற்றி மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அதிமுகவின் இருபெரும் தலைவர்களையும் தொண்டர்கள் ஏற்றுள்ளனர், எனத் தெரிவித்தார்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என்று கூறிய நிலையில், சசிகலாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்கள் உண்டா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவுடன், வளர்மதி பதிலளிக்காமல் சிரித்தார். மீண்டும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என்று கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 1382

    0

    0