மதுப் பழக்கத்தை அரசு ஊக்குவிப்பதா?…பொங்கும் சமூக ஆர்வலர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan8 March 2022, 6:51 pm
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதன் முறையாக டாஸ்மாக் மதுபானங்களின் விலை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 4,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூலம் அதிக வருவாய்!!
இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வால் மதுபான பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, குடும்பத் தலைவிகள் ரொம்பவே கவலையில் மூழ்கி விட்டனர். அவர்களைப் போலவே சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
மதுபான விலை உயர்வு : அதிர்ச்சி
“மது அருந்தும் குடும்பத்தலைவரால் அவருடைய வீட்டில் மனைவி, குழந்தைகள்தான் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக அன்றாடம் வேலை பார்த்து கூலி பெறுவோர் இனி வீட்டுக்கு கொண்டு வரும் பணம் தினமும் 50 ரூபாய் வரை குறைந்து போகும்.
இந்தக் கணக்கின்படி பார்த்தால் மாதத்திற்கு மது அருந்துவோர் தனது வீட்டிற்கு கொடுக்கும் தொகை மேலும் 1500 ரூபாய் வரை குறையலாம் என்று குடும்பத் தலைவிகள் அச்சப்படுகிறார்கள். இதனால் சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் அதிகமாகி மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொல்வதும் அதிகரிக்கலாம். கணவனின் குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்கும் மனைவி கொலை செய்யப்படுவதையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம்.
மதுவால் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
தற்போது நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களுக்கு பெரும்பாலும் மது மற்றும் போதைப் பொருள் பழக்கம்தான் முக்கிய காரணமாக உள்ளது.
அதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 72 சதவீத விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படுகிறது.
மதுவுக்கும் அடிமையாகும் ஆண்கள், பெண்கள்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் பேரின் உயிரை மது காவு வாங்குகிறது.
இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 36 சதவீதம். ஆனால் இது தமிழகத்தில் 48 சதவீதமாக இருக்கிறது.
ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு இணையாக இளம்பெண்களிடமும் மது அருந்தும் பழக்கம் அதிகமாகி விட்டது. அதுவும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 65 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.
டாஸ்மாக்குக்கு மூடல்? திமுக வாக்குறுதி என்னாச்சு?
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனைக்கும் திமுக தனது 2016 தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே மதுக்கடைகளை இழுத்து மூடுவோம் என்று வாக்குறுதி அளித்தது. திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் உடனடியாக மூடப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார். இப்போதும்கூட மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துத்தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது.
டாஸ்மாக் வழக்கில் திமுக மேல்முறையீடு
தமிழகத்தில் உள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான பார்களை அடுத்த 6 மாதத்துக்குள் இழுத்து மூட வேண்டும் என்று அண்மையில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் அன்றாடம் 70 சதவீத மது விற்பனை நடக்கிறதென்றால் மதுபார்கள் மூலம் 30 சதவீத மது விற்பனை செய்யப்படுகிறது.
கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
எனவே தமிழக அரசின் இந்த மேல்முறையீடு மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக அளித்த வாக்குறுதிக்கு முரண்பட்டதாக உள்ளது
அரசுக்கு வருவாயை ஈட்ட வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. அதனால் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு மாற்று வழியைத் தேட வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.
வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தலைவிகளோ, மதுபான விலை உயர்வால் இன்னும் பதற்றப் படுகிறார்கள்.
மதுபான விலை உயர்வால் திண்டாடும் ஏழை மக்கள்
அவர்கள் கூறும்போது “தினக்கூலிக்கு செல்வோர் படும் பாடுதான் இதில் திண்டாட்டம். எங்கள் குடும்பச் செலவுக்கு அன்றாடம் கிடைக்கும் பணம் அப்படியே குறைந்துபோகும். வீட்டில் கஞ்சிகாய்ச்சி குடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.
குழந்தைகளுக்கு நல்ல துணிமணிகள் உடுத்தி அழகு பார்க்க முடியாது.பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற எண்ணமும் கைகூடாமல் போகலாம். ஏற்கனவே கொரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்து விட்ட நாங்கள் இனி பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடுவதையே மறந்துவிட வேண்டியதுதான்.
மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றினாலும் கூட இல்லத்தரசிகள் இதனால் படப்போகும் அவஸ்தை மட்டும் குறையப்போவதில்லை.
குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக இழுத்து மூடினால் நன்றாக இருக்கும். எங்களின் துன்பமும், துயரமும் தீரும்” என்று அவர்கள் மனம் குமுறுகிறார்கள்.
திமுக அரசை வெளுத்து வாங்கிய கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் கடுமையாக திமுக அரசை விமர்சித்து இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுவிலக்கு அமலிலிருந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காவல்துறைக்கு மறைந்தும், சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் அஞ்சியே என்றாவது ஒருநாள் குடித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் 40 – 50 வயதைத் தாண்டியவர்களாகவே இருந்தார்கள். கள்ளச்சாராயம், கள் போன்றவற்றைத் தேடிப்பிடிப்பதே சிரமப்பட வேண்டியதாக இருந்தது.
பல காரணங்களைச் சொல்லி ’திராவிட மாடல்’ இரண்டாவது முறையாகத் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு, 1971ல் கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும் திறந்து விடப்பட்டன. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக மது வாசனையே அறியாத ஒரு தலைமுறை குடிப்பழக்கத்திற்கு ஆளானது.
என்னே விடியல்? என்னே திராவிட மாடல்?
குஜராத்தைப் போல தமிழகத்தின் தனிநபர் வருமானம் ஏன் உயரவில்லை? என்றால் ’இது திராவிட மாடல்’ என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ஒரு உழைப்பாளி சம்பாதிக்கும் உழைப்பில் 75 சதவீதத்தை அரசாங்கமே அபகரித்துக் கொண்ட பிறகு, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் எப்படி உயர முடியும்?
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சகட்டுமேனிக்கு அனைத்து வாக்காளர்களுக்கும் 1000 முதல் 5000 ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது வாக்குகளுக்குக் கொடுத்த பணத்தை பத்து நாட்கள் கூட விட்டு வைக்க ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. இதோ மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் தொடங்கி, பிற மது பானங்களுக்கு 500 ரூபாய் வரையிலும் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் பெறக்கூடிய வகையில் விலை ஏற்றத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இந்த 5 ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணமாக இருக்கப் போகிறது. அனைத்தும் தமிழக மக்களின் வியர்வையும், ரத்தமுமாகத்தானே இருக்க முடியும். ஆஹா என்னே விடியல்? என்னே திராவிட மாடல்?
மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சசிபெருமாள் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடெங்கும் மதுவிலக்குக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அன்று மார் தட்டினார்கள். ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆன நிலையிலும் அவர்கள் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தால், அதற்கு நேர் எதிர் மாறாக ஆண்டொன்றுக்கு ரூபாய் 5000 கோடியை எளிய மக்களிடத்திலிருந்து உறிஞ்சும் வகையில் மதுபான விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறக்கலாம், நாம் மறந்து விடக் கூடாது” என்று கூறியுள்ளார்.