ஆந்திராவில் புதிய Flavourல் கஞ்சா : ரசாயண தொழிற்சாலையில் போதை வஸ்து தயார் செய்த 2 பேரை கைது செய்த தமிழக போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2022, 8:48 pm
ஆந்திரா : தொழிற்சாலையில் போதை பொருள் தயார் செய்த 2 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போதை பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து சென்னைக்கு போதை பொருட்கள் சப்ளை நடைபெற்றது தெரியவந்தது.
அதன அடிப்படையில் நேற்று ஓங்கோல் வந்த சென்னை போலீசார் அங்குள்ள தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி மெத்தம்பேட்டமைன் என்ற பெயரிலான போதைப்பொருள் தயார் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
போதை பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த கிடங்கிற்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த விஜய் மற்றும் வெங்கடரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் தொழிற்சாலைகளுக்கு தேவையான ரசாயன கலவையை தயார் செய்து வியாபாரம் செய்கிறோம் என்ற பெயரில் கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். பின்னர் அதில் ரகசியமாக போதை பொருட்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளனர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.