பங்கரில் இருந்த போது உணவு கிடைக்கல.. கடைசியா அரசின் சப்போர்ட் கிடைச்சுது… உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் பேட்டி…!!
Author: Babu Lakshmanan11 March 2022, 12:04 pm
போரால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனில் இருந்து மத்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக வந்ததாக தமிழக மாணவன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் சூர்யா (20). இவர் இங்கு பிளஸ் 2 முடித்துவிட்டு, ஏரோ ஸ்பேஸ் எஞ்சீனியரிங் 4 ஆண்டுகள் படிப்பதற்காக கடந்த 2019 அக்டோபர் மாதம் 26ந்தேதி உக்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்குள்ள கார்கியூ நேஷனல் ஏரோஸ் பேஸ் யுனிவர்சிட்டியில் சேர்ந்து தற்போது 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
அங்கு ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் குறித்த தகவல் கடந்த 25ஆம் தேதி அன்றுதான் இவருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆறு நாட்கள் பெரிதும் கஷ்டப்பட்டு கடந்த 3ஆம் தேதி கார்கிவ் ஜி யூ லிவியூ வழியாக ரயிலில் ஏற ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் காத்திருந்துள்ளனர். அப்போது ரயில்வே ஸ்டேஷன் அருகில் குண்டு வெடித்ததில் அதிர்ச்சி அடைந்து மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை வழியாக பல கிலோ மீட்டர் நடந்தே சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு 6 நாட்களுக்கு போதுமான உணவு மட்டுமே கைவசம் இருந்தது. பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பசியில் இருந்துள்ளனர். இதனையடுத்து 2 நாட்கள் அங்கேயே தங்கிருந்து கடந்த 3 ஆம் தேதி ரயில் மூலம் வக்ஸால் என்ற இடத்திற்கு சென்றனர். இந்நிலையில் ஒருவழியாக உக்ரேன் பார்டர் சகோனி லிவியூ வழியாக டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். அதன் பிறகு மாநில அரசு மூலம் சென்னை வந்தடைந்து உள்ளூர் திரும்பினார்.
இது குறித்து மாணவன் சூர்யா கூறியதாவது :- போர் தொடங்கியதாக எனக்கு மெசேஜ் வந்தது. அதற்கு பிறகு அரை மணி நேரத்திலேயே எனக்கு சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது. எல்லா பக்கமும் வெடிக்க ஆரம்பிச்சதால், இங்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்து, அங்கிருந்து பங்கர் போலாம் என முடிவு செய்து அங்கு சென்றோம். அங்கு ஒரு வாரம் காத்திருந்த எங்களுக்கு 2 நாட்கள் உணவு கிடைக்கவில்லை. கடந்த 3 ஆம் தேதி உக்ரைன் உள்ள எல்லாரும் கிளம்ப தொடங்கியுள்ளனர். 3 ஆம் தேதியிலிருந்து 4 ஆம் தேதிவரை இரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த ஊர் மக்கள் என்னை ரயில் ஏறவிடவில்லை.
ரொம்ப நேரம் காத்திருந்ததை பார்த்து ஒரு ரயிலில் ஏற உள்ளே விட்டனர். ரயிலில் 24 மணிநேரம் டிராவல் பண்ணினோம். லிவி என்ற இடத்திற்கு வந்த போது எங்களுக்கு அரசு சப்போர்ட் கிடைத்தது. அங்கிருந்து ஹங்கேரி சென்றோம். அங்கிருந்து இந்திய விமானம் மூலம் கடந்த 6 ஆம் தேதி டெல்லி வந்தோம். அங்கிருந்து இரவு சென்னைக்கு 7 ஆம் தேதி வந்தேன். பிறகு அங்கிருந்து மாவட்ட வாரியாக தனது ஊருக்கு வந்தேன், என தெரிவித்தார்.