அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி : போலி பெண் டாக்டர் உட்பட 2 பேர் தலைமறைவு..!!
Author: Udayachandran RadhaKrishnan11 March 2022, 2:09 pm
கோவை : கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தள்ளுவண்டி வியாபாரியிடம் ரூ 15 லட்சம் மோசடி செய்த போலி பெண் டாக்டர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் எஸ்.எல்.எஸ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 25). இவர் பி.இ படித்து முடித்துவிட்டு தள்ளுவண்டிக்கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் பிரதீப் என்ற டிரைவர் பழக்கமாகிறார். அவரிடம் முருகன் தன் தம்பி வேல்பாண்டிக்கு அரசு வேலை வேண்டுமென கேட்டார்.
அதற்கு பிரதீப் தனக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 வருடங்களாக டாக்டராக வேலைபார்க்கும் தன்யா என்பவரை தெரியும் என்றும், அவர் மூலமாக தம்பிக்கு வேலை வாங்கலாம் என்றும் அதற்கு பணம் செலவாகும் என்று கூறினார்.
இதனை உண்மையென நம்பிய முருகனை, பிரதீப் சிங்காநல்லூர் திருச்சி சாலையில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் தன்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.
தன்யா முருகனிடம், உங்கள் தம்பிக்கு அரசு வேலை வேண்டும் என்றால் ரூ.15 லட்சம் லஞ்சமாக பணம் தர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து முருகன் கடந்த நவம்பர் 28ம்தேதி தன்யா வீட்டிற்கு பிரதீப் உடன் சென்று, ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தார். பின்னர் மறு நாள் ரூ.8 லட்சம் பணத்தை கொடுத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி தன்யாவின் வங்கி கணக்கிற்கு ரூ2 லட்சம் பணத்தை அனுப்பினார். பணத்தை கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராததால் ஏமாற்றமடைந்த முருகன் தன்யா வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கொடுங்கள் இல்லையென்றால் வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து பிரதீப், தன்யா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் தன்யா போலி டாக்டராக நடித்து, ரூ.15 லட்சம் பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள தன்யா மற்றும் பிரதீப் ஆகியோரை தேடி வருகின்றனர்.