இறைச்சிக் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : திருடிய நகைகளை தங்கக் கட்டியாக மாற்றிய பலே திருடனை வளைத்தது போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 2:24 pm

கோவை : இறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த கில்லாடி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்,

கோவை சிங்காநல்லூர் நந்தனம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ். இவர் அந்த பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கம்போல், சுரேஷ் தனது இறைச்சிக்கடைக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் அனைவரும் வெளியே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். இந்நிலையில் பட்டபகலில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் 37 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சுரேஷ் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பட்டப்பகலில் ஒரு மர்மநபர் சுரேஷின் வீட்டில் கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கோவை இருகூர் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சுற்றுவதாக ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சுந்தர் என்ற புறா சுந்தர் என்பது தெரியவந்தது.

மேலும் இவரிடம் இருந்து சுரேஷின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 37 சவரன் தங்க நகையில், 18.5 பவுன் தங்க நகையை தங்க கட்டியாக பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அடுத்து கோவை சிங்காநல்லூர் போலீசார் சுந்தர் மீது கொள்ளை வழக்கு பதிவு செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!