திமுகவுக்கு எதிராக ஆம் ஆத்மி?…எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு விவகாரம்!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2022, 7:35 pm
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பாஜகவுக்கு எதிராக யாருடைய தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்ற சவாலான கேள்வி எழுந்துள்ளது.
யாருடைய தலைமையில் எதிர்க்கட்சிகள்
அதுவும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் படு தோல்வி கண்டதால் இப்பிரச்சனை பூதாகரமாக மாறியும் இருக்கிறது.
இதனால் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி தலைவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டிய நெருக்கடிக்கும் காங்கிரஸ் தலைமை தள்ளப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை அழைத்த மம்தா
6 மாதங்களுக்கு முன்பு தனது தலைமையில் தேசிய அளவில் உருவாகும் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் இணையும்படி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அழைப்பு விடுத்து இருந்தார்.
ஆனால் காங்கிரஸ் இதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த மம்தா காங்கிரஸ் தனியாக செல்ல வேண்டும் என்றால் போய்க் கொள்ளட்டும் என்று விரக்தியுடன் சொன்னார்.
ஆனால் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பரிதாப தோல்வி கண்டதால்
இப்போது அக்கட்சியை எதிர்க் கட்சி கூட்டணியில் சேரும்படி கூறி சற்று இறங்கி வந்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து விடக் கூடாது. அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்துதான் மம்தா இப்படி காங்கிரசுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய இந்த வேண்டுகோளும் கூட பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்ததுதான் என்கிறார்கள்.
மாபெரும் கூட்டணியை அமைக்க திமுக வியூகம்
மம்தாவின் இந்த முயற்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, தேசிய அளவில் தனது தலைமையில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க திமுகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை அண்மையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தமிழகத்துக்கு அடுத்த குறி
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் 4-ஐ பாஜக கைப்பற்றி இருப்பது இந்தியா ஆபத்தான பாதையை நோக்கி நடந்து கொண்டிருப்பதை காட்டுகிறது. இதோ அவர்கள் இப்போது தமிழகத்தையும் குறி வைத்து விட்டார்கள். பாஜக மெல்ல காய்களை நகர்த்தி வருகிறது. எனவே தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் அகில இந்திய அளவில் சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு அரசியல் முன்னணியாக, ஒரு மாற்று அரசியல் சக்தியாக வடிவம் பெற வேண்டும்.
நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் இந்தியாவுக்கு தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சி ததும்ப குறிப்பிட்டார்.
பாஜகவை வீழத்த ஸ்டாலின் தலைமையில் கூட்டணி
இப்படி திருமாவளவன் கூறுவதன் மூலம் தேசிய அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமையும் திமுக கூட்டணியில் அனைத்து மாநில எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்த முன் வரவேண்டுமென்று அவர் வலியுறுத்துவது பளிச்சென்று தெரிகிறது.
அதேநேரம் டெல்லிக்கு அப்பாற்பட்டு இன்னொரு பெரிய மாநிலமான பஞ்சாபில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி இருப்பதன் மூலம் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தனது தலைமையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையவேண்டும் என்கிற ஆசை துளிர்த்துள்ளது. இதற்கு காரணம் கோவா மாநில தேர்தலில் ஆம் ஆதமி கட்சி இரண்டு இடங்களை கைப்பற்றியதுடன் 7 சதவீத ஓட்டுகளையும் பெற்று இருப்பதுதான். அதுமட்டுமன்றி உத்தரகாண்ட் மாநிலத்தில் 3.3 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் ஆம் ஆத்மி
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
இது எல்லாமே, ஆம் ஆத்மி தேசிய அளவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும், அது காங்கிரசை விட வலிமை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விரும்புவதை காட்டுகிறது.
அதுமட்டுமன்றி தென் மாநிலங்களான தமிழகம், தெலுங்கானா, கேரளா, புதுச்சேரியிலும் ஆம் ஆத்மியை பலம் வாய்ந்ததொரு கட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கெஜ்ரிவால் ஆலோசனைப்படி தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
அரசியலில் மாற்றம் விரும்புவோர் இணைய அழைப்பு
இதுபற்றி, கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பார்த்தி கூறும்போது, “பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து, எங்களுடைய கொள்கைகள், செயல்பாடுகளுக்கு தென் மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டின் அரசியலில் மாற்றம் ஏற்படுத்த விரும்புவோர், எங்களுடன் இணையும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தெலுங்கானா, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கையை விரைவில் நடத்த இருக்கிறோம். இந்த மாநிலங்களில், அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 முதல் பாத யாத்திரையும் நடத்த உள்ளோம். அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் பாத யாத்திரை நடக்கும்” என்று தேசிய அளவில் காங்கிரசை விட ஆம் ஆத்மியை பெரியதொரு இயக்கமாக மாற்ற விரும்பும் தனது சிந்தனையை வெளியிட்டார்.
ஆம் ஆத்மி குண்டால் நடுங்கும் திமுக, திரிணாமூல்
ஆம் ஆத்மியின் இந்த திடீர் நடவடிக்கை திமுகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் பெரும் சவாலாக அமைந்திருப்பதாக டெல்லியில் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அரசியல் பார்வையாளர்கள் கருத்து
“தற்போது ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில தேர்தலிலும் பிரமிக்கத் தக்க அளவிற்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2020-ல் நடந்த டெல்லி தேர்தலிலும் 70 இடங்களில் 62 தொகுதிகளை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 2015 தேர்தலில் டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் இருந்த சுவடே தெரியாமல் ஆக்கியது. இதனால்தான் அத்தனை மாநிலங்களிலும் வலுவாக காலூன்றி விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்று ஆம் ஆத்மி கணக்குப் போடுகிறது. இந்த விஷயத்தில், தான் திமுகவை விட ஒரு படி தன் கை மேலோங்கி இருக்கவேண்டும் என்று கெஜ்ரிவால் விரும்புகிறார். அப்போதுதான் பிரதமர் வேட்பாளராக தன்னை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கருதுகிறார்.
தமிழகத்தை கடந்து திமுகவிற்கு வேறு மாநிலத்தில் செல்வாக்கு இல்லை என்பதால் ஸ்டாலினுக்கு எதிராக சாதுரியமாக காய்களை நகர்த்தி வருகிறார். பஞ்சாபில் கிடைத்திருக்கும் அமோக வெற்றி மூலம் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை ஆம் ஆத்மி ஆட்டம் காண வைத்துள்ளது.
அதனால் திமுக தலைவர் ஸ்டாலினும் தங்களது தலைமையில் அமையும் எதிர்க்கட்சிகள் கூட்டணியை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று ஆம் ஆத்மி மனக் கணக்கு போடுகிறது.
இப்போதைக்கு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கெஜ்ரிவாலுக்கே அதிகம் உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் குஜராத்திலும், இமாச்சல பிரதேசத்திலும்
நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி பெறும் வெற்றி, வாங்கும் ஓட்டு சதவீதத்தை பொறுத்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதற்கு விடை கிடைத்துவிடும்.
பிரசாந்த் கிஷார் வியூகம்
ஆனால் ஒரேயொரு விஷயம் மட்டும் இதில் தெளிவாக புரிகிறது. கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் மூவருமே அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர்தல் உத்திகளின்படிதான் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியவர்கள். அதனால் 2024ல் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், பிரசாந்த் கிஷோர் வகுத்துக்கொடுக்கும் செயல்திட்டங்களின் அடிப்படையில்தான்
பாஜகவுக்கு எதிரான பிரச்சாரமே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் 5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என்று அவர்தான் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையை அளித்துக் கொண்டிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் சேர்க்கப்படுவது உறுதி என்று தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. அந்தக் கோபமும் கூட அவரிடம் இருக்கலாம். அதனால்தான் அவர் சமீபகாலமாக காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்ற ஒரு புதிய தகவலையும் அவர்கள் தெரிவித்தனர்.
டெல்லி அரசியல் பார்வையாளர்கள் கூறும் இந்த கருத்திலும் உண்மை இருக்கவே செய்கிறது!