மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: காதில் பூ சுற்றிக்கொண்டு மனு அளித்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்…!!
Author: Rajesh14 March 2022, 1:57 pm
கோவை: மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை காதில் பூ சுத்தி கொண்டு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுத்தி கொண்டும் மனுக்களை கழுத்தில் அணிந்தவாறும் நூதன முறையில் மனு அளிக்க வந்திருந்தனர். இது குறித்து கூறிய அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் காதில் பூ சுத்திக்கொண்டும், இதுவரைக்கும் அளித்த மனுக்களை மாலையாக அணிந்துக்கொண்டும் வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சீராக அமல்படுத்தி நடத்தி வருகிறது என கூறிய அவர்கள் சில அரசு அலுவலர்கள் அரசுக்கு அவபெயர் ஏற்படுத்தும் வகையில் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதுமில்லை எனவும் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவிதமான பதிலும் தருவதில்லை என குற்றம் சாட்டினர்.
பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.