2024 தேர்தல் கூட்டணி : திருமாவால் திடீர் சலசலப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2022, 5:19 pm
அண்மையில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஒரு விஷயத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். அதில் அவருடைய ஆதங்கமும், எரிச்சலும் அதிகமாகவே வெளிப்படுகிறது.
தமிழகத்தைத் தாண்டி அவருடைய இந்த குரல் வேறு எந்த மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை.
எதிர்க்கட்சிகளுக்கு திருமா வைத்த கோரிக்கை!!
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,” பாஜக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பேசவில்லை. மாறாக மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறது. இந்த ஆபத்தை விரட்டவும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட அனைத்து மதசார்பற்ற அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்
மீண்டும் பாஜக வெற்றி பெற்று விடக்கூடாது” என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 12க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் யாரும் பேசாத விஷயத்தை தொடர்ந்து திருமாவளவன் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவுக்கே
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பஞ்சாபில் காங்கிரசைத் தோற்கடித்து ஆம் ஆத்மி வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் பாஜகவுக்கு ஆர்வத்துடன் வாக்களித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுவும் உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவாவை பொறுத்தவரை சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட பெரும் எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜகவுக்கே சாதகம்
இது பாஜகவுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மிகவும் சாதகமான தொரு அம்சம்.
அதனால் 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இதனால்தான் பாஜகவை தோற்கடிக்க அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் அவ்வப்போது மறைமுகமாக கூறிவரும் யோசனைகளின் அடிப்படையிலும் திமுகவின் குரலாக விசிக தலைவர் பேசிவருகிறார் என்றும் யூகிக்கத் தோன்றுகிறது.
ஆனாலும் நிஜத்தில் அரசியல் வட்டாரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை காண முடிகிறது. தமிழகத்தில் மட்டுமே திமுக கூட்டணியில் மாறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகளைக் கொண்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திருமாவின் எண்ணம் சரியானதா?
தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சி முதலமைச்சர் பினராயி விஜயன் வசம் உள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் அந்த மாநிலத்தில் மேலும் 18 இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி விட்டது.
காங்கிரசும், இடதுசாரிகளும் இணைய வேண்டுமென்ற திருமாவளவனின் எண்ணம் இந்த மாநிலத்தில் நிறைவேறினால் அது கேரளாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள பாஜக குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பை உருவாக்கித் தருவது போல் அமைந்து விடும் என்பது எதார்த்தமான உண்மை.
அதேபோல மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுவரும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் ஒரே அணியில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை.
அப்படியே 3 கட்சிகளும் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் அந்த மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எதிர்க்கட்சிகள் இணைந்தால் யாருக்கு லாபம்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மாறாக முந்தைய தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 2021 தேர்தலில் 70 இடங்களை கைப்பற்றியது.
எனவே மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியில் இணைத்துக் கொண்டாலும் கூட கம்யூனிஸ்ட்களை சேர்த்துக் கொள்ள மம்தா பெரிதும் தயக்கம் காட்டலாம்.
காங்கிரஸை ஓரங்கட்டும் ஆம் ஆத்மி
டெல்லி மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ்தான் எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே ஆம் ஆத்மியும் காங்கிரசும் இங்கே கூட்டணி அமைத்தால் அது சிரோமணி அகாலிதளமும், பாஜகவும் 2024 தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது போலாகிவிடும்.
தவிர டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் கூட்டணி அமைத்தால்
இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள பாஜக மீண்டும் 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அப்படியே அள்ளிவிடும். எனவே கெஜ்ரிவாலும் காங்கிரசை தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்வாரா? என்பது சந்தேகம்தான்.
தெலுங்கானா, ஆந்திர அரசு முடிவுகள்தான் என்ன
தற்போது தெலுங்கானாவை ஆட்சி செய்யும் சந்திரசேகர் ராவின் நிலைமையும் அதேபோல்தான் உள்ளது. அவருடைய தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்தால் மாநிலத்தில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பாஜகவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து 2024 தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பை உருவாக்கித் தருவது போலாகிவிடும்.
இதே போன்ற சூழலில்தான் ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும் உள்ளது. காங்கிரசை தனது கூட்டணியில் அவர் சேர்த்துக் கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பாஜகவும் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 20 இடங்களை கைப்பற்றுவதற்குரிய வாய்ப்பை தருவதாக அமைந்துவிடும். தவிர காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஜெகன்மோகன் ரெட்டி ஒதுக்குவார் என்ற சிக்கலான கேள்வியும் எழும்.
இது மாதிரியான நிலையே மராட்டியம், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் காணப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுபற்றி டெல்லி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “காங்கிரசை தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் அவஸ்தைதான் படவேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நினைக்கலாம். அவர்கள் திருமாவளவன் கோரிக்கை விடுப்பது போல ஒருங்கிணைவார்களா? என்பதும் கேள்விக்குறிதான்.
ஏனென்றால் பாஜகவை வலிமையானதொரு தேசிய கட்சியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். மதவாத கட்சியாக பார்ப்பது இல்லை. அது போன்றதொரு தோற்றம் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகளின் கூட்டணியில் மட்டுமே தென்படுகிறது.
திருமா கணக்கு கைகொடுக்குமா?
அதனால்தான் பாஜக என்றாலே இந்தக் கட்சிகள் அச்சம் கொள்கின்றன. அலறுகின்றன. ஆனால் உத்தரப் பிரதேசத்திலும் கோவாவிலும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பல தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது. எனவே மக்கள் பாஜகவை மதவாத கட்சியாக பார்க்கவில்லை என்பதே நிஜம்.
திருமாவளவன் போடும் கணக்கு எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. எனவே 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்துவது எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருக்கும். அதனால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அத்தனை எதிர் கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறுவது எந்த அளவிற்கு சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.
உக்ரைன் விவகாரத்தால் உயரும் பாஜக புகழ்
மேலும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் உக்ரைன் நாட்டின் போர் முனையில் இருந்து 21 ஆயிரம் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு சிறப்பு விமானங்கள் மூலம் நாட்டுக்கு அழைத்து வந்தது, பிரதமர் மோடியின் புகழை நாட்டு மக்களிடையே பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.
ஏனென்றால் ஒரே நேரத்தில் ரஷ்யா, உக்ரைன் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசி இந்திய மாணவர்களை மீட்பதற்காக தற்காலிக போர் நிறுத்ததையும் ஏற்படுத்தினார் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம்.
தவிர கொரோனா பரவலை தடுக்க முதல் டோஸ் தடுப்பூசி 97 கோடி பேருக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 81 கோடிப் பேருக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 2 கோடி பேருக்கும் இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ளது, மத்திய பாஜக அரசின் சாதனை. இவையும் 2024 தேர்தலில் மோடிக்கு பெரிதும் கைகொடுக்கும் “என்று அந்த அரசியல் விமர்சகர்கள் விவரித்தனர்.