ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல… பள்ளி, கல்லூரிகளில் அணியக் கூடாது : கர்நாடகா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Author: Babu Lakshmanan15 March 2022, 11:04 am
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சீருடையில் மட்டும்தான் வரவேண்டும் என்று கர்நாடகா அரசு உத்தரவை பிறப்பித்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பியூ கல்லூரி இஸ்லாமி மாணவிகள் உள்பட பலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை மீது கடந்த பிப்ரவரி 10ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்தப்பட்டது. 11 நாட்களாக நடைபெற்ற விசாரணையின் போது, அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. பின்னர், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, ஹிஜாப் வழக்கில் 15ம் தேதி, அதாவது இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என்று நேற்று கர்நாடக நீதிமன்றம் அறிவித்தது. இதையொட்டி, பெங்களூரூவில் இன்று முதல் ஒருவாரத்திற்கு போராட்டம் நடத்தவோ, பொதுமக்கள் கூட்டமாக கூடவோ தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜேஎம் காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் கொண்ட அமர்வு வெளியிட்டது. அதில், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய விஷயமல்ல எனக் கூறி, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து மாணவிகள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.