பிரமாண்டமான திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா : விண்ணைப் பிளந்த ‘ஆரூரா தியாகராஜா’ கோஷம்… தேரை வடம் பிடித்து இழுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…!!!

Author: Babu Lakshmanan
15 March 2022, 7:24 pm

ஆசியாவிலேயே பிரம்மாண்டமான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகராஜா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருக்கடையூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்ற பொன் மொழிக்கு ஏற்ப திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் மிகவும் அழகானதாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சி தருகின்றது. ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான தேர் என்ற பெயர் இதற்கு வர காரணம் 300 டன் எடையும் 96 அடி உயரமும் கொண்டிருப்பதாலேயே இப்பெயர் வரக்காரணம். அப்படிப்பட்ட ஆழித் தேரோட்ட விழா ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவாக தியாகராஜர் கோயிலில் நடைபெறுவது வழக்கம். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னர் கட்டப்பட்டது என பல்வேறு சிறப்புகளை கொண்டது திருவாரூர் தியாகராஜர் கோயில்.

இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த ஃபிப்ரவரி மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் தனது ஸ்தானத்திலிருந்து தியாகராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் புடைசூழ, அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித் தேருக்கு எழுந்தருளினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய நான்கு தேர்களும் வடம் பிடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக காலை 8.10 மணியளவில் ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுசேர்ந்து ஆரூரா தியாகராஜா என்கிற பக்தி முழக்கத்துடன், சிவ வாத்தியங்கள் முழங்க ஆழித் தேரின் வடத்தினை பிடித்து இழுத்து வந்தனர். தொடர்ந்து கீழ வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி என நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் சுற்றிவந்தது.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பிற மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆழித் தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் அரசு பேருந்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

மேலும் சுகாதாரத்துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு வாகனங்களும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1473

    0

    0