முன்னாள் அமைச்சரை கொன்ற வழக்கில் முக்கிய கொலையாளி… குமரி to குஜராத் வரையில் தேடப்படும் குற்றவாளி… யார் இந்த நீராவி முருகன்..?

Author: Babu Lakshmanan
16 March 2022, 2:25 pm

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன். இவனை ரவுடிகள் வட்டாரத்தில் அவனுடைய சொந்த ஊர் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்ததால் ‘நீராவி முருகன்’ என்று பிரபலமானான். 45 வயதான இவன் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி உள்பட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1998ல் தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே செல்வராஜை கொலை செய்த வழக்கில் நீராவி முருகனை போலீசார் சேர்த்தனர். திருப்பூரில் கொள்ளையடித்த நகை, பணத்தை பங்குபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியை கொன்றான்.

முன்னாள் திமுக அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான ஆலடி அருணா கொலையில் கூலிப்படையாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீராவி முருகனை இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக காவல்துறையினரிடம் அவனே வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமல்லாது குஜராத் வரையில் தனது கைவரிசையை காட்டிய இவன், போலீசாருக்கு தண்ணி காட்டி வந்துள்ளான். பெண்களை குறி வைத்து வழிப்பறி செய்வதோடு, அவர்கள் போலீஸில் சென்று புகார் அளிக்காத வண்ணம் மிரட்டல் விடுப்பது அவனது ஸ்டெயிலாக இருந்து வந்துள்ளது.

crime_scene_updatenews360

தூத்துக்குடியில் ரவுடிசம் செய்து வந்ததால், நீராவி முருகனுக்கும், பிரபல தாதா ஒயின்ஸ் சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், அவர்களுடைய நட்பின் வெளிப்பாடாக ஒயின்ஸ் சங்கரின் பெயரை தன்னுடைய மார்பில் முருகன் பச்சை குத்தி இருக்கிறான். ஒயின்ஸ் சங்கருக்காக பல காரியங்களை முருகன் செய்துள்ளான்.

கடந்த 2019ஆம் ஆண்டு நீராவி முருகன் கும்பல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலை பிடிக்க போலீசார் முயன்ற போது, நீராவிமுருகன் உள்ளிட்டோர் காரில் ஏறி தப்பியுள்ளனர். அப்போது, அவர்கள் சென்ற கார் அருகிலுள்ள சாலையோர சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியது.

இதனால், அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் போலீஸ் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொல்ல முயன்றான். சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், ரவுடிகள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால், நீராவிமுருகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் வெளியே வந்த நீராவி முருகன், பல்வேறு குற்றச் செயல்களை சளைக்காமல் செய்து வந்துள்ளான்.

அப்படித்தான் திண்டுக்கல் நிகழ்ந்த குற்ற சம்பவம் ஒன்றில் தொடர்புடைய நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். களக்காடு அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயன்ற போது, அங்கிருந்து தப்பிக்க, தன்னிடம் இருந்த அரிவாளால் மீண்டும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். இதில், போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காப்புக்கா போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நீராவி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற நீராவி முருகன், மீண்டும் அதே முறையை கையில் எடுத்துள்ளான். ஆனால், இந்த முறை போலீசார் அதனை முறியடித்து, நீராவி முருகனின் சகாப்தத்தை முடித்துள்ளனர். உல்லாசத்திற்காக மக்களை ஒடுக்க நினைக்கும் இதுபோன்ற ரவுடிகளுக்கு, நீராவி முருகனின் மரணம் சிறந்த பாடமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1614

    0

    0