இது என்ன புதுசா இருக்கு…அமெரிக்காவில் தலைதூக்கும் ஸ்டெல்த் ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கா?
Author: Rajesh16 March 2022, 9:05 pm
நியூயார்க்: அமெரிக்காவில் ஒமிக்ரான் கொரோனாவின் BA.2 திரிபான ஸ்டெல்த் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஒமிக்ரான் திரிபான ஸ்டெல்த் ஒமிக்ரான் பரவி மக்களை அச்சத்திற்குள்ளாகியுள்ளது. அங்கு 3,507 கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதனால் மொத்தமாக சாங்சுன் மாகாணத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4 மாகாணங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவிலும் ஸ்டெல்த் ஒமிக்ரான் பரவி வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 25,359 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது கடந்த இரண்டு மாதங்களில் இது அதிக அளவிலான கொரோன பாதிப்பு ஆகும்.
ஏற்கனவே உக்ரைன் போர், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்காவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்தான இப்போது ஸ்டெல்த் ஒமிக்ரான் கேஸ்கள் அங்கு பரவ தொடங்கி உள்ளன. முக்கியமாக நியூயார்க், நியூ ஜெர்சி, விர்ஜின் தீவு ஆகிய இடங்களில் ஸ்டெல்த் ஓமிக்ரான் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
அங்கு புதிதாக பதிவாகும் கொரோனா கேஸ்களில் 37 சதவிகிதம் ஸ்டெல்த் ஒமிக்ரான். இதனால் விரைவில் இந்த ஸ்டெல்த் ஒமிக்ரான் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் இது நான்காம் அலையை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தற்போது 23,796,184 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதனால் இந்தியாவில் 4 ம் அலை பாதிப்பு ஏற்படுமா அல்லது ஸ்டெல்த் ஒமிக்ரான் பரவல் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. முன்னதாக ஜூன் மாதம் கொரோனா 4ம் அலை ஏற்படும் என ஐஐடி கான்பூர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.