குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம்: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி..!!
Author: Rajesh17 March 2022, 4:29 pm
கோவை: குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஒரு நாள் பயிற்சி முகாமை மாநகராட்சி மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி வெரைட்டிஹால் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இதனை கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் அங்கு காட்சிப்படுத்த பட்டிருந்த குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு வழங்கபட வேண்டிய உணவு பொருட்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சமூக நலத்துறை, குழந்தைகள் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திமதி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு எவ்வகை உணவுகள் வழங்கப்படுகிறது, குழந்தைகளுக்கு எவ்வாறு பாடங்கள் கற்று தரப்படுகின்றன என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் தேவைகள் குறித்தும், அங்கன்வாடி மையங்களை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது, குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 18 வட்டாரங்களில் 1697 அங்கன்வாடிகளும் 35,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.