மகளிருக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றம்… ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது…? தமிழக அரசின் பட்ஜெட் மீது பொதுமக்கள் அதிருப்தி..!!
Author: Babu Lakshmanan18 March 2022, 1:11 pm
மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை குறித்து அரசு அளித்துள்ள விளக்கத்தினால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்று, தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்தப் பட்ஜெட்டில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகம் இருப்பதால், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியாது என அறிவித்து விட்டு, பணபலன் சார்ந்த வாக்குறுதிகளை கிடப்பில் போட்டுள்ளது.
மேலும், புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தாமல் இருந்த திட்டங்களிலேயே தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது.
இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையான ரூ.1,000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பட்ஜெட்டின் கடைசி வரையில் மகளிருக்கான உரிமைத் தொகை பற்றி எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, உரிமைத் தொகை வழங்குவது எப்போது என்பது பற்றிய விளக்கத்தை மட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அவர் கூறியதாவது :- மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தின் தகுதியான பயனாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன. விரைவில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும், எனக் கூறினார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஓராண்டை எட்டவுள்ள நிலையில், தேர்தலின் போது அறிவித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு அண்மையில் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
இதனால், இது தொடர்பான அறிவிப்பு இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.