ரூ.2.10 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரி பணியிட மாற்றம் மட்டும்தானா…? இது ஊழலை ஒழிக்க உதவாது : அன்புமணி கொந்தளிப்பு

Author: Babu Lakshmanan
21 March 2022, 12:06 pm

சென்னை : ரூ.2.10 கோடி லட்சம் பெற்ற சென்னை போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்காமல், வெறும் பணியிடை மாற்றம் செய்ததற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் -1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது. பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது!

சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்!

கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி!

ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1238

    0

    0