கேள்வி கேட்டால் பதில் சொல்லனும்… அதைவிட்டுட்டு பேப்பரை தூக்கி வீசிட்டு போறாரு நிதியமைச்சர் பிடிஆர்… இபிஎஸ் கண்டனம்…!!
Author: Babu Lakshmanan24 March 2022, 12:59 pm
சென்னை : அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல், அவையை விட்டு நிதயமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியேறிவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, விருதுநகரில் திமுக நிர்வாகி மற்றும் மைனர் பசங்களால் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்தும் பேச அதிமுக உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்டார்.
இதனால், கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ;- பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேசிய போது நிதியமைச்சர் வெளியேறிவிட்டார். அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல், அவர் கையில் வைத்திருந்த பேப்பரை தூக்கி வீசிவிட்டு அவையில் இருந்து வெளியேறிவிட்டார். இது எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்தும் செயல். ஓ, பன்னீர் செல்வம் கருத்துக்கு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளியேறுவதா? அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார்.
2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் வெளியான அறிவிப்புகளின் உண்மை நிலையை முதல்-அமைச்சர் மறைத்துவிட்டார். நிதியமைச்சர் தந்த புத்தகத்தில் அதன் உண்மை நிலை இடம்பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம், என்றார்.