ஊழல்னு சொல்றீங்க.. சொத்து கணக்க காட்ட நாங்க ரெடி.. உங்களால முடியுமா? முன்னாள் முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 9:36 pm

புதுச்சேரி : அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சொத்து கணக்கை காட்ட தயாரா என பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் சவால் விடுத்துள்ளார்.

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அகில பாரத பா.ஜனதா மகளிர் நிர்வாகிகள் கூட்டம் வரும் சனிக்கிழமை புதுச்சேரியில் தனியார் விடுதியில் நடைபெற உள்ளது என்றும் இதில் பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி, பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மகளிரணி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காந்தி, சுபாஷ்சந்திரபோஸ் கண்ட கனவை பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றி வருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை நாடு முழுவதும் தருகிறோம் என்றும் இதனால்தான் கருத்து கணிப்புகளை மீறி 5 மாநில தேர்தலில் பா.ஜ.க 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் புதுச்சேரியில் காவல்துறைக்கு நேர்மையான முறையில் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 50 ஆண்டாக பின்தங்கியிருந்த புதுவை 10 மாதங்களில் பெஸ்ட் புதுவையாகிவிட முடியாது என்றும் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும்போதுதான் புதுவையின் வளர்ச்சி கண்ணுக்கு தெரியும் என்றார்.

முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வுக்கு பா.ஜனதா பற்றி விமர்சிக்க தகுதியில்லை எனவும் ஊழல்வாதிகள் என அமைச்சர்களை குற்றம்சாட்டும்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது சொத்து கணக்கை காட்ட தயாராக உள்ளாரா என கேள்வி எழுப்பிய அவர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சொத்து கணக்கை காட்ட தயார் என்றார்.

  • Ajithkumar Vidaamuyarchi box office in Bihar பீகாரில் மாஸ் காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் முந்தைய சாதனைகள்!