தொடரும் கூட்டு பாலியல் பலாத்கார கொடூரம்…கடற்கரையில் கதறிய இளம்பெண்: காதலன் கண்முன்னே 3 பேர் வெறிச்செயல்..!!
Author: Rajesh26 March 2022, 3:39 pm
ராமநாதபுரம்: கடற்கரையில் இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
விருதுநகரில் காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதை நண்பர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் அந்த பெண்ணை சீரழித்த வழக்கு தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 2 திமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து, 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 4 பேர் மாணவர்களும் ஆபாச வீடியோவை காட்டி, அந்த பெண்ணை சீரழித்த கொடூரம் அரங்கேறியது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை முடியும் முன்னரே, கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலூரில் ஒரு பெண் டாக்டர், நண்பருடன் நைட்ஷோ பார்த்துவிட்டு வரும்போது, நண்பரை தாக்கிவிட்டு பெண் மருத்துவரை கடத்தி சென்று 5 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், கைதான 4 பேரில் 3 பேர் மைனர்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
இந்த அதிர்ச்சி செய்தி வெளியாகி ஒருவாரம் கூட ஆகாத நிலையில், சென்னை அம்பத்தூரில் 13 வயது சிறுமியை வீட்டிற்குள் நுழைந்து 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் மேலும் திடுக்கிட வைத்துள்ளது.
இந்நிலையில், விருதுநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராமநாதபுரத்தில் சமூக விரோத கும்பலால் சீரழிக்கப்பட்டதாக போலீசில் புகாரளித்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி, தனது காதலருடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, காதலர்கள் இருந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்ட 3 பேர் கொண்ட மர்மகும்பல் காதலர்களை சுற்றிவளைத்து, அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர். இதை தொடர்ந்து, காதலனை கட்டிபோட்டு விட்டு அவரது கண்முன்னே அந்த இளம்பெண்ணை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இளம்பெண்ணின் காதலர் அந்த கும்பலிடம் இருந்து காதலியை மீட்க போராடியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் எங்களை விட்டுடுங்க, நாங்க இந்தபக்கம் வரமாட்டோம் என்று அவர்கள் காலில் விழுந்து கெஞ்சி கதறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த கும்பல் காதலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளது.
எவ்வளவு போராடியும் காதலிக்கு நேர்ந்த கொடுமை தடுக்க முடியவில்லை என்ற விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதலன் ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டிஎஸ்பியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தீவிர விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்களை கைது செய்ய போலீசார் சென்ற போது, 3 பேரும் காவலர்களை அரிவாளால் வெட்டிவிட்டு பைக்கில் தப்ப முயன்றபோது, காவலர்கள் விரட்டிப்பிடித்து 3 பேரையும் கைது செய்தனர். அடுத்தடுத்து நிகழும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை கட்டுப்படுத்த தண்டனைகள் கடுமையாக்கப்பட் வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.