‘நிலத்துக்கு உரிய இழப்பீடு கொடுக்கணும்’: உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்…கருமத்தம்பட்டியில் பரபரப்பு..!!
Author: Rajesh28 March 2022, 4:30 pm
கோவை: உயர் மின் கோபுரங்கள் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்கக்கோரி கோவை கருமத்தம்பட்டி அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய விளை நிலங்கள் வழியாக தமிழக அரசின் மின்வாரியத்தின் மூலமாக அரசூர் – ஈங்கூர் 230 கே.வி. மின் வழித்தடம் அமைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு உள்பட்ட கருமத்தம்பட்டி, எலச்சி பாளையம் திருப்பூர் மாவட்டத்திற்கு உள்பட்ட செம்மாண்டம்பாளையம், ராக்கியாபாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், செங்கப்பள்ளி, புஞ்சைதளவாய்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வழியே உயிர் மின் கோபுரமும், மின்கம்பியும் அமைக்கப்பட உள்ளது
இந்நிலத்தில் பயிர் செய்துள்ள தென்னை, சோளம், பருத்தி, காய்கறிப் பயிர்கள், வேம்பு உள்ளிட்ட வளர்ந்த மரங்கள் சேதமாவதாலும், நிலமதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும் உயர்மின் கோபுரம் மாற்றுப்பாதையில் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் ஒரு இழப்பீடும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இழப்பீடும் கணக்கிடப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அமைக்கப்பட்டு வரும் மின் கோபுரங்களுக்கும், கம்பி செல்லும் பாதைக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நிலத்திற்கான இழப்பீட்டை, கோவை மாவட்ட ஆட்சியர் பின்பற்றிய வழிமுறையான கிராமத்தின் உயர்ந்தபட்ச வழிகாட்டி மதிப்பை எடுத்துக் கணக்கிட்டு சந்தை மதிப்பில் வழங்க வேண்டும் எனக் கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையத்தில் உயரழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.