வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு பாராட்டு விழா வைப்பது அர்ஜுன் சம்பத்துக்கு வயிறெரிய செய்யும் : முன்னாள் நீதியரசர் சந்துரு கிண்டல்..!!
Author: Babu Lakshmanan28 March 2022, 10:33 pm
கோவை : மக்களுக்காக சேவை செய்யும் அனைத்து வக்கீல்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்று கோகுல் ராஜ் கொலை வழக்கு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓம்லூர் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட பல்வேறு அமைப்பினர் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதியரசர் சந்துரு கலந்து கொண்டார். இதில் முன்னாள் நீதியரசர் சந்துரு பேசியதாவது :- இந்நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. கோவை எனக்கு இரண்டாவது தாய் நகரம். சங்கர் கோகுல்ராஜ் கொலைக்கு பின் இது போன்ற நிகழ்வுகளுக்கு தனி சட்டம் வேண்டும் என சில அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ப.பா.மோகனுக்கு பாராட்டு விழா வைப்பது அர்ஜுன் சம்பத்துக்கு வயிறெரிய செய்கிறது. கோவை குண்டு வழக்கில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மோகன் ஆஜரானபோது மோகனுக்கு, சிலரால் அர்பன் நக்சல் என பட்ட பெயர் வைக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாதாடினால் அந்த வழக்கறிஞரையும் சேர்ந்து இழிவு படுத்த ஒரு கூட்டம் சுற்றி கொண்டிருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றம் என்ற ஒன்று வந்த போது வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் எல்லாம் வெளி நாட்டவர்கள் தான். பிறகு தான் இங்கு சட்டபடிப்புகள் எல்லாம் வந்து இங்குள்ளவர்கள் சட்டத்தை படிக்க துவங்கினார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் இந்திய வழக்கறிஞர்களுக்கும் ஆங்கிலேயே வழக்கறிஞர்களுக்கும் பெரிய வாக்குவாதம் சண்டை எல்லாம் நிகழ்ந்துள்ளது. அப்போது பிரமணர்கள் தான் பெரும்பாலும் இந்த பணியில் இருந்தார்கள். தற்போது தான் அந்த காலம் மாறி வருகிறது.
முன்பு வழக்கறிஞர்கள் என்றாலே வம்சாவழியாக வந்தவர்கள் தான் இருந்தார்கள். சிறந்த வக்கீல் யார் என்றால் யாருக்கும் அச்சமில்லாமலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காசு வாங்காமல் வாதாடுபவர் தான் நல்ல வக்கீல்கள். இந்தியாவில் இருக்க கூடிய பெரும்பாலான மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்களுக்காக போராடுபவர் தான் ப.பா.மோகன். தற்போது கட்டணம் செலுத்தினால் தான் வக்கீல்கள் வாதாடுவார்கள் என்ற நிலை வந்துள்ளது. நமது அறம் அது அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காசு வாங்காமல் வாதாடி நீதி பெற்று தருவது தான் நமது அறம். அரசுக்கு எதிராக வாதாடும் போது அந்த வழக்குகளில் வெற்றி பெரும் போது எங்களை பாராட்டுவது இன்சுலின் அளிப்பது ஊக்கமளிக்கிறது. மக்களுக்காக சேவை செய்யும் அனைத்து வக்கீல்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும்.
தற்போது திறமையான வக்கீல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் இல்லை என்று தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாட கூடியவர்களையும் நீதி வழங்குபவர்களையும் நாம் உருவாக்க வேண்டும், என தெரிவித்தார்.
பின் பேசிய ப.பா மோகன் நீதியரசர் சந்துருவின் வாதாடும் விதம் குறுத்தும் அவரது இயல்பு குறித்தும் கூறினார். மேலும் தனது வழக்கறிஞர் வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்ட அவர், சட்டபடிப்பு படிக்கும் இளம் மாணவர்களுக்கு சில புத்தகங்களை சிபாரிசு செய்தார். இந்நிகழ்வில் ப.பா.மோகனுக்கு மாலை அணிவித்து மகுடம் சூட்டப்பட்டு பாராட்டப்பட்டது.