லேப் டெக்னிசியன் படிப்பை முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது : அனுமதியின்றி இயங்கி வந்த கிளினிக்குக்கு சீல்!!
Author: Udayachandran RadhaKrishnan30 March 2022, 6:26 pm
திருப்பூர் : தனியார் மருத்துவமனையில் ஒருவருட லேப் டெக்னிசியன் படிப்பு முடித்து விட்டு பொது மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து கைகாட்டிப்புதூரில் கே. எஸ். கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அவிநாசி பகுதியை சேர்ந்த சுதா என்பவருக்கு சொந்தமான இந்த மருத்துவமனையில் புதுக்கோட்டை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது 44), நோயாளிகளுக்கு பொது மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ஒரு வருட லேப் டெக்னிசியன் படிப்பு மட்டுமே படித்த இவர் பொது மருந்துவம் பார்ப்பதாக வந்த புகாரை அடுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார சுகாதார ஆய்வாளர், பொது மருத்துவ அலுவலர் ஆகியோர் இன்று மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஜெயக்குமார் போலி மருத்துவர் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவிநாசி போலீசார் போலி மருத்துவர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
மேலும், அனுமதியின்றி இயக்கி வந்த மருத்துவ ஆய்வக கூடம் மற்றும் கிளினிக் இரண்டையும், வட்டாச்சியர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.