சுயேட்சை கவுன்சிலர் ஒருபக்கம்…திமுக-காங்கிரஸ் கவுன்சிலர்கள் மறுபக்கம்: சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது…சேலத்தில் பரபரப்பு..!!
Author: Rajesh31 March 2022, 6:10 pm
சேலம்: சாலைகள் அமைக்கும் பணியின் போது சுயேட்சை கவுன்சிலரும், திமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி 31வது கோட்டம் கோட்டை பகுதியில் உள்ள நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி முறையாக சாலை அமைக்கவில்லை எனக்கூறி சுயேட்சை கவுன்சிலர் சையத் மூசா என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வராததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். அதில், சாலை அமைக்கும் பணியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஒப்பந்தாரருக்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும் சுயேட்சை கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதனால், நிறுத்திய சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், சுயேட்சை கவுன்சிலரை கண்டித்தும் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சையத் மூசாவின் ஆதரவாளர்களும் அந்த பகுதியில் திரண்டதால் இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் முற்றியது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றாமல், அவசர கதியில் தரமற்ற சாலைகள் போடும் பணியை தொடர விடமாட்டோம் என சையத் மூசா தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.