100 நாட்களில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை… யோகியின் முதல் சிக்சர்.. கிலியில் எதிர்கட்சிகள்..!!
Author: Babu Lakshmanan1 April 2022, 11:43 am
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் 2வது முறையாக முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்.
உத்தரபிரதேச வரலாற்றில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கை தானே கண்காணிக்கும் விதமாக, உள்துறையை தக்க வைத்துக் கொண்டார். அதேபோல, ஊரக வளர்ச்சித் துறையும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கும், சக துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக்கிற்கு சுகாதாரத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் தன் ஆட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றாற் போல செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் யோகி ஆதித்யநாத், பல்வேறு வகையான அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.
அதன்படி, அடுத்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தேர்வு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களை இணைத்து, அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 100 நாட்களில், மாநிலத்தைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அரசு வேலை வழங்க, அனைத்து சேவைகள் தேர்வு வாரியத்துக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ஆட்சேர்ப்பு முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், அதனை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால், எதிர்த்து விமர்சிக்க முடியாமல் எதிர்கட்சிகள் கிலியில் உள்ளன.