நதிநீர் பிரச்சனையை வைத்து தமிழ்,தெலுங்கு, கன்னடர்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி : ராமதாஸ் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
1 April 2022, 2:14 pm

சென்னை: நதிநீர் பிரச்சனையை காரணம் காட்டி, தமிழர்கள், தெலுங்கர் மற்றும் கன்னடர்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தெலுங்கு, கன்னட புத்தாண்டான உகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு தான். யாதும் ஊரே… யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலுக்கு ஏற்ப தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை தமிழக மக்கள் தங்களின் சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.

தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அனைத்து வசதிகளுடனும், சுதந்திரமாகவும் வாழ தமிழகம் வகை செய்துள்ள அதேநேரத்தில், தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்துள்ளனர். தமிழர்களுடன் மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் உணர்வால் தமிழர்களின் சகோதரர்களாகவே வாழ்கின்றனர்.

அவர்களையும் சகோதரர்களாகவே தமிழர்கள் பார்க்கின்றனர். ஆனால், ஆற்று நீர் பிரச்சினைகளை காரணம் காட்டி சகோதர்களிடையே மோதலை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உகாதித் திருநாள் சகோதரத்துவத்தை வளர்க்கும் திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களுக்கு எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1468

    1

    0