ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி ரூ.10 லட்சம் அபேஸ்.. மது அருந்தி ரூ.4 லட்சம் மொட்டை போட்ட கேடிகள் கைது : கோவையில் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2022, 2:24 pm
கோவை : ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து பறித்து சென்ற இருவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, டிரை புரூட்ஸ் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக ஒரு கோடி ரூபாய் கடன் பெற முயன்ற போது, அவருக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றில் கமிசனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது கோவையை சேர்ந்த கவுதம் என்பவர் பணம் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதற்காக தனக்கு ரூ.25 லட்சம் ரூபாய் கமிசன் தர வேண்டும் என அவர் கூறியதை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஸ்ரீதேவியின் மகன் ரமணா என்பவர் மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி அருகே வருமாறு அவர்கள் கூறியதை அடுத்து ரமணா அங்கு வந்த போது, கவுதம் உள்ளிட்ட இருவர் அட்டை பெட்டி ஒன்றை கொடுத்து அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி ரமணா அவர்களிடம் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து உடனே இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரமணா பெட்டியை பிரித்து பார்த்த போது, அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிரஷ்கள் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களை துரத்தி செல்ல முயன்ற போதும், அவர்கள் கிடைக்காததால் இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாயமான இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கவுதம் என்ற போலியான பெயரை பயன்படுத்தியதும், அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த ஜனகன் (வயது 42) மற்றும் செட்டிபாளையத்தை சேர்ந்த மார்டின் அமல்ராஜ் (வயது 42) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமணா புகாரில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறியிருந்த நிலையில், அவர் கொடுத்த பையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பது தெரியவந்தது.
மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜனகனும், மார்ட்டினும் மோசடியாக பெற்ற பணத்தை கொண்டு, தங்களது கடன்களை அடைத்துவிட்டு, நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியதும் தெரியவந்துள்ளது.