போதையில் ரோந்து பணி?…மாஸ்க் அணியாத பெண்ணை அவமரியாதை திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட தஞ்சை எஸ்.பி.!!
Author: Rajesh3 April 2022, 1:08 pm
தஞ்சையில் மாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கோபத்தில் அவமரியாதையாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் வேலாயுதம் (55). இவர் சம்பவத்தன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியே ஸ்கூட்டியில் பூக்காரத்தெருவை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் வனிதா (42) மற்றும் வசந்தா (28) ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
அவர்களை மறித்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டுள்ளார். இதில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் அந்த பெண்களை அவமரியாதையாக திட்டியுள்ளார். மேலும், அந்த காவலர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து பொது இடத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசியது மற்றும் போலீஸ் மாண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தியது போன்றவற்றுக்காக சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.