மக்களுக்கான திட்டங்களை முடக்க திமுக ஆர்வம் காட்டுவது ஏன்?: கோவையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
5 April 2022, 1:30 pm

கோவை: மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்த திமுக அரசு சொத்துவரி உயர்வு மட்டும் மத்திய அரசு கூறியதால் உயர்த்தப்படுகிறது என கூறுவது ஏன் என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சொத்துவரி உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் சொத்துவரி உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், பெண்களுக்கு இலவச இரு சக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் கண்டன சிறப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, எத்தனையோ பொய்களை சொல்லி ஆட்சிக்கு திமுக வந்தது என்றும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டதாகவும் கூறினார். 100 ரூபாய் கொலுசை கொடுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கில் வரியை உயர்த்தி விட்டதாக கூறினார்.

மக்கள் அந்த வரியை கட்டும் போதுதான் அதன் விபரீதம் புரியும் எனவும் தெரிவித்தார். மத்திய அரசு எது கூறினாலும் அதனை நிறைவேற்ற மாட்டோம் என கூறி வரும் திமுக அரசு இதை மட்டும் மத்திய அரசு கூறியதால் செய்தோம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்?.

அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டது என கூறிய அவர் ஆனால் அப்போதைய முதல்வர் (எடப்பாடி பழனிச்சாமி) ஒரு சதவீதம் கூட சொத்து வரியை உயர்த்த கூடாது என கூறி மக்களுக்கு நன்மை செய்தார் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் கோவையில் 50 ஆண்டு காலங்களில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொண்டு வந்தோம் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் பெரும்பாலும் முடிக்கப்பட்ட மேம்பாலம், கூட்டு குடிநீர், புறவழி சாலை பணிகளை தற்போதைய அரசு மெதுவாக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலிலும் திமுக அரசுக்கு ஆதரவாக அலுவலர்கள் செயல்பட்டதாக தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன்முதலில் புகார் கொடுத்தது பொள்ளாச்சி ஜெயராமன் தான் என்றும் ஆனால் அதனை அப்படியே மாற்றி விட்டுவிட்டதாக தெரிவித்தார். அப்போது திமுக கம்யூனிஸ்ட் உட்பட பலரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டார்கள் ஆனால் தற்போது நடைபெற்ற விருதுநகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி சொத்துவரி உயர்வு, அதிமுக திட்டங்களை ரத்து செய்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். திமுக அரசு இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கடந்த ஆட்சியில் கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கோவையில் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். பெட்ரோல் டீசல் விலையை பொருத்தவரை பிற மாநில அரசு குறைத்த வரியை போல் இந்த அரசு வரியை குறைக்கவில்லை எனவும் தமிழக அரசும் மத்திய அரசும் விலையை குறைக்க வேண்டும் என கேட்டுகொண்டார். இந்த சொத்துவரி உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என திமுக வினர் கூறுகின்றனர் ஆனால் இதனை திமுக அரசு தான் உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1194

    0

    0