அழிந்து வரும் மண் வளப் பாதுகாப்பு : பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 5:58 pm

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவையில் பொதுமக்களுக்கு இன்று (ஏப்ரல் 6) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை ரயில்நிலைய நுழைவு வாயில் முன்பு மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40 ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் நம்முடைய பாரம்பரிய கலையான களரியின் மூலமும், ஃப்ளாஸ் மாப் நடனத்தின் மூலமும் மக்களின் கவனத்தை ஈர்த்து மண் வள பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இது தொடர்பாக ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கூறுகையில், “மண் வளம் என்பது உலகளவில் வேகமாக அழிந்து வருகிறது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (UNFAO) தற்போது நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், உலகில் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் முற்றிலும் காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளது.

மேலும், சர்வதேச விஞ்ஞானிகள் 2045-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 930 கோடியாக அதிகரித்து விடும் எனவும், அதேசமயம், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. அந்த நிலை உருவானால் உள்நாட்டு கலவரங்களும், பசி, பட்டினி பிரச்சினைகளையும் அதிகரிக்கும். ஆகவே, மண் வளத்தை காக்க நாம் இப்போதே களமிறங்க வேண்டும்.

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தியும், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘மண் காப்போம்’ என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கி உள்ளார்.

அதற்காக, அவர் லண்டனில் இருந்து தமிழ்நாடு வரை 3 கண்டங்கள் மற்றும் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அத்துடன், உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் பல்வேறு வழிகளில் இவ்வியக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, நாங்கள் இந்நிகழ்ச்சியை இன்று கோவையில் நடத்தி உள்ளோம்.” என்றனர்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…