மீண்டும் தலைதூக்கும் திம்பம் பிரச்சனை…நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு..!!
Author: Rajesh10 April 2022, 8:59 am
திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர கனரக வாகனங்களுக்கு நிரந்தரத் தடை விதித்த நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, திங்கட்கிழமை கடையடைப்பு, காத்திருக்கும் போராட்டம், லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் இரவு நேரத்தில் மட்டும் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் 12 சக்கர கனரக வாகனங்களும் நிரந்தரமாக இந்த பாதையில் செல்லக் கூடாது என தடை விதித்தது.
மேலும் 16.2 தன்னுடைய அளவுள்ள வாகனங்களுக்கு மட்டுமே திம்பம் மலைப்பாதையில் அனுமதி உண்டு என உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லாரி உரிமையாளர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் இறுதியில் நாளை மறுநாள் திங்கட்கிழமை சத்தியமங்கலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் எனவும், அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாது என்றும், பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்களின் காத்திருக்கும் போராட்டமும் நடைபெறும் எனவும் முடிவெடுக்கப்பட்டு போராட்டம் அறிவிப்பு செய்தனர்.