இலவச டிக்கெட் வாங்க வந்த பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : திருப்பதி மலையில் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2022, 3:01 pm
திருப்பதி : இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது மற்றும் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம் நடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம் மாதம் 12ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று திருப்பதி உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு வழங்க முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் திருப்பதியில் செயல்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களும் நேற்று மூடப்பட்டன. இந்த நிலையில் கவுண்டர்கள் மூடப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் வழக்கம் போல் இன்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வாங்குவதற்காக திருப்பதிக்கு வந்தனர்.
கவுண்டர்கள் மூடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் கோவில் முன் நின்று மானசீகமாக இறை வழிபாடு நடத்தி ஊர் திரும்பலாம் என்று அவர்களில் பலர் முடிவு செய்தனர்.
எனவே அவர்கள் திருப்பதி மலைக்கு செல்ல புறப்பட்டனர். ஆனால் மலையடிவாரத்தில் இருக்கும் அலிப்பிரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் டிக்கெட் இல்லாதவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் நாளை பதினோராம் தேதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல வேண்டும்.
12ஆம் தேதி சாமி கும்பிடுவதற்கு தேவையான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பக்தர்கள் நாளை காலை முதல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மலையடிவாரத்தில் சாலையில் நின்றவாறு அங்கிருந்து செல்ல இயலாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் நாங்கள் உங்களை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க இயலாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பக்தர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர்.
இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இன்று திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மற்றும் 12ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.