6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘ரம்மி’: மாணவர்களிடையே சூதாட்ட எண்ணத்தை விதைப்பதா?..அரசின் மீது கல்வியாளர்கள் அதிருப்தி..!!
Author: Rajesh12 April 2022, 2:12 pm
சென்னை: தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட கணித பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு இடம்பெற்றுள்ளது கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட 6ம் வகுப்பு, மூன்றாம் பருவத்துக்கான கணிதப் புத்தகத்தில் முழு எண்கள் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. அதில் முழு எண்களை விளக்கும் விதமாக சீட்டுக் கட்டின் படம் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் மதுவையும், சூதாட்டத்தையும் ஒழிக்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சீட்டுக் கட்டு விளையாட்டை உதாரணமாகக் கூறி பாடம் தயாரித்திருப்பது தவறானது என கல்வியாளர்கள் கொந்தளித்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், தமிழக மாணவர்களை தேசிய அளவில் தகுதிப்படுத்தும் அளவுக்கு அவர்களுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.
அப்படியொரு பாடப் புத்தகமான ஆறாம் வகுப்பு கணிதம் புத்தகத்தில் தான் சீட்டாட்டத்தை மையப்படுத்தி முழு எண்களை விவரித்துள்ளனர். ‘பிளஸ்’ எண்கள், ‘மைனஸ்’ எண்கள், ‘ஜீரோ’ என எல்லாவற்றையும் உள்ளடக்கியதை கணிதத்தில் முழு எண்கள் என்கிறோம். அதை எப்படி வேண்டுமானாலும் விவரிக்கலாம் என முடிவெடுத்து, தமிழகத்தில் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளனர்.
உதாரணத்துடன் விளக்க வேண்டும் என்பதற்காக, சீட்டுக் கட்டுகளை வைத்து விவரித்துள்ளனர். சீட்டு விளையாடுவதே தவறு எனும்போது, சூதாட்டத்தை வைத்து பாடம் சொல்லி கொடுத்தால், மாணவர்களின் மனம் அதை நோக்கிச் செல்லும். தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில், நிலங்களையும், மலைகளையும், குளங்களையும் உதாரணம் காட்டி பாடம் தயாரித்துள்ளனர்.
எனவே, அடுத்த கல்வி ஆண்டிலாவது, சூதாட்ட முன்னுதாரணத்தை பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும். அதேபோல, நான்காம் வகுப்பு பாடம் ஒன்றில், ஐவகை நிலங்கள் என குறிப்பிடுவதற்கு பதிலாக, நான்கு வகை நிலங்கள் என குறிப்பிட்டுள்ளனர். சூதாட்டம் உதாரணமாகக் காட்டப்படும்போது அதுவே மாணவர்கள் மனதில் தவறில்லை என பதியலாம், அந்த ஆபத்து இருக்கிறது.
அதனால், அடுத்த கல்வியாண்டில் முழு எண்கள் பாடத்தில் வேறு உதாரணங்களை கொண்டு விளக்க ஏற்பாடு செய்யப்படும். வேறு பாடத்திட்டங்களில் குறைகள் இருந்தாலும் களையப்படும் என கல்வியியல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.