பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து…விலை குறைய வாய்ப்பு: ஜவுளித்துறையினர் வரவேற்பு..!!

Author: Rajesh
15 April 2022, 1:47 pm

கோவை: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் ஜவுளித்தொழில் சிறப்பான நிலையை அடையும் என்றும், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் ஜவுளித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தென்னிந்திய பஞ்சாலை சங்கம் (சைமா) அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

தொழிற்துறையின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் செஸ் வரிகளை ரத்து செய்ததற்காக பிரதமர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர், மத்திய வேளாண்துறை அமைச்சர் மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் ஆகியோருக்கும், கடிதங்கள் மூலம் பருத்தி மீதான இறக்குமநியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திய தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏப்ரல் மாதம் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம். இதன் மூலமாக நூற்பாலைகள், கைத்தறிகள், விசைத்தறிகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள் பயனடையும்.

இந்த ஆண்டு 340 லட்சம் பேல் தேவைப்படும் என நிர்ணயித்திருந்த நிலையில் , 45 லட்சம் பேல் குறைவாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. நடப்பு ஆண்டில் ஒரு பேல் பருத்தியின் ரூ. ஒரு லட்சம் வரை சென்றது. தற்போது வரி குறைப்பால் பருத்தி விலை குறைய உள்ளது. ரூ.85 ஆயிரம் வரை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், இந்தியாவில் பதுக்கப்பட்ட பருத்திகளும் இந்த காலகட்டத்தில் வெளி வரும். பருத்தி விலை குறைந்த அதே நேரத்தில் நூல் விலையையும் குறைக்க வேண்டும். ஒரு சில மாதங்களில் ஆயத்த ஆடைகள் விலை குறையும். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. 35 லட்சம் பேல் வரை பருத்தி இறக்குமதியாகும் என எதிர்பார்க்கின்றோம். தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.

தற்போது 1.5 லட்சம் ஹெட்கேர் பரப்பளவில் பருத்தி விளைச்சல் உள்ளது. 3 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இதனை இரட்டிப்பாக வேண்டும் என்பது எங்களது குறிக்கோள். இறக்குமதி செய்யப்படும் பருத்தியால் உள்ளூர் விவசாயம் பாதிக்கப்படாது. ஏனெனில் உள்ளூரில் கிடைக்கும் பருத்தியை விட இறக்குமதி செய்யும் பருத்தி விலை அதிகமாகவே உள்ளது.

இலங்கை போன்ற நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவிற்கு பின்னலாடை உற்பத்தி ஆர்டர்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1209

    0

    0