பீஸ்ட் படம் பார்க்க சென்ற ரசிகர் விபத்தில் உயிரிழப்பு… ஒரு இரங்கல் கூட சொல்ல மாட்டீங்களா..? நடிகர் விஜய்க்கு கிளம்பிய கேள்வி..
Author: Babu Lakshmanan15 April 2022, 10:34 pm
பீஸ்ட் படம் பார்க்க சென்ற போது கார் விபத்தில் சிக்கியதில் ரசிகர் ஒருவருக்கு உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவிக்காதது வேதனையின் உச்சம் என்று தமிழக பால் முகவர்கள் சங்க தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அஜித் உள்ளிட்ட நடிகர்களைப் போல இல்லாமல், ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பு, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை நல்வழிப்படுத்தாத நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தமிழக போலீஸூக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். இது பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு எதிராக பொன்னுசாமி மேலும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-நடிகர் விஜய் நடிப்பில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடந்த 13-ம் தேதி வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் சிறப்பு காட்சியை கோவை மாநகரில் உள்ள திரையரங்கில் காண முன்பதிவு செய்து, தனது நண்பர்களுடன் சென்ற கவுசிக் என்கிற ரசிகர் ஓட்டிச் சென்ற கார், விபத்தில் சிக்கி அவர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.
அவரோடு உடன் சென்ற நண்பர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது நடிப்பில் வெளியான திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காணச் சென்ற ரசிகரின் வாகனம் விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததோடு உடன் சென்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகனை இழந்து தவிக்கும் ரசிகர் கவுசிக்கின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதுவரை ஒரு இரங்கல் செய்தியோ, ஆறுதலான வார்த்தைகளோகூட அறிக்கையாக வெளியிடப்படாதது வேதனையின் உச்சம்.
தங்களின் வாழ்வாதாரமாக திகழும் ரசிகர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை தாங்கள் நடிக்கும் படம் மூலம் கோடி, கோடியாய் பணம் வந்து கொட்டினால் மட்டும் போதும் நினைக்கும் ஒரு சில நடிகர்கள் இருப்பது திரையுலகின் சாபக்கேடு. ஒருபுறம் டாஸ்மாக் கடைகளின் வெளிச்சத்திலும், மறுபுறம் திரை வெளிச்சத்திலும் மின்மினிப் பூச்சிகளாய் தங்களின் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைய சமுதாயம் இனியேனும் தங்களின் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒரு கனம் சிந்தித்துப் பார்த்து தங்களை திருத்திக் கொள்ள முன் வர வேண்டும். இல்லை நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் இளைய சமுதாயத்தையும், அடுத்த தலைமுறையையும் அந்த ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, எனக் குறிப்பிட்டுள்ளார்.