‘கோவிந்தா’ கோஷம் விண்ணைப் பிளக்க… வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… கடலென திரண்ட பக்தர்கள்…!! (வீடியோ)
Author: Babu Lakshmanan16 April 2022, 9:17 am
மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார் கள்ளழகர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.,5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று காலை தேரோட்டமும் நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி தங்கக் குதிரையில் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
நேற்று மூன்றுமாவடியில் எதிர்சேவை முடிந்து, பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி நேற்றிரவு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு ஆண்டுகளுக்கு பிறகு, இன்று காலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நின்று பார்த்து பக்தி பரவசமடைந்தனர்.
கடலென குவிந்த பக்தர்களுக்கு மத்தியில் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்த கள்ளழகர், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 6.30 மணியளவில் வைகையில் எழுந்தருளினார். ‘கோவிந்தா’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.
இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. நாளை காலை 11:00 மணிக்கு தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்.,18 இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார்.ஏப்.,20 மதியம் 12:05 மணி முதல் 1:30 மணிக்குள் கோயில் திரும்புகிறார்.