‘அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது… உழைப்பவருக்கே உயர் பதவி’ – எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 1:28 pm

அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இல்லத்தில் அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் உருவச்சிலை திறப்பு விழா முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (ஏப்.18 ) நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சிவபதி, ம.சின்னசாமி, முன்னாள் எம்.பி. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில்அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, பேசியதாவது :- அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. உழைக்கின்ற அனைவருக்கும் உயர் பதவி கிடைக்கும்.

அதிமுக, மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொடுத்தது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டி பெருமை பேசி வருகிறது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டி வருகிறது. 11 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசும், திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசும் எப்படி இருந்தன என்பது மக்களுக்குத் தெரியும்.

அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையில் முதலிடத்தில் இருந்தோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் நிரம்பியதால் தண்ணீர் பற்றாகுறை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது. அதிமுகவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மகளிருக்கு 2 சக்கர வாகனம் ஆகிய திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருகிறது,” என்று கூறினார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1460

    0

    0