ஆளுநர் ஆர்என் ரவி இன்று திடீரென டெல்லி பயணம்… வெடிக்கிறதா கருப்புக்கொடி விவகாரம்..?
Author: Babu Lakshmanan20 April 2022, 10:49 am
மயிலாடுதுறையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்ட நிலையில், இன்று அவர் திடீரென டெல்லி செல்வது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, 7 பேரின் விடுதலை குறித்த தனித்தீர்மான மசோதாக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலமுறை அவரை சந்தித்து பேசியும் பலனளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, ஆளும் திமுகவினர் ஆளுநர் பற்றி நேரடியாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று மயிலாடுதுறைக்கு ஆன்மீகப் பயணம் கொண்ட ஆளுநருக்கு, விசிக, திராவிட இயக்கத்தினர் கருப்புக் கொடியை காட்டியதுடன், அவரது வாகனத்தின் மீதும் அதனை எறிய முற்பட்டனர். இதற்க பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தைக் கூட தமிழக அரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி திடீரென இன்று டெல்லி செல்ல இருக்கிறார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடிவு செய்ததாக அண்மையில் தகவல் வெளியாகி வந்தன. எனவே, இது தொடர்பாக இந்தப் பயணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.