அதிமுக திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் தீவிரம் காட்டும் திமுக… சென்னையில் முக்கிய திட்டத்தின் பெயரை மாற்றி அதிரடி.. ஓபிஎஸ், இபிஎஸ் ஷாக்..!!
Author: Babu Lakshmanan20 April 2022, 5:12 pm
சென்னை : அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றி, திமுக அரசு மீண்டும் செயல்படுத்தியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2011ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டிலும் அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், அந்த ஆண்டே முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆட்சியமைத்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அதிமுக தொண்டர்கள் அழைக்கும் அம்மா என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். குறிப்பாக, அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா மெடிக்கல், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா இருசக்கர வாகன உதவி திட்டம், அம்மா காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
பின்னர், 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட திருமண உதவித் திட்டமாக இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவிடும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும், அம்மா சிமெண்ட் திட்டத்தை வலிமை சிமெண்ட் என்று தமிழக அரசு மாற்றியமைத்தது. அதேபோல, அம்மா உணவகங்களில் பெயர் பலகைகளை மறைத்தல் உள்ளிட்ட கடந்த ஆட்சிகாலத்தின் சுவடுகளே இல்லாத வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையாக, அதிமுக ஆட்சியில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொண்டு வரப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயரை தற்போது அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை கொண்டு வந்ததாக கூறும் அதிமுகவினர், திமுகவின் இத்தகைய நடவடிக்கைகளால் அதிர்ச்சிக்க மேல் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.