ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேர்திருவிழா கொடியேற்றம்… ‘ரெங்கா ரெங்கா’ கோஷத்துடன் பக்தர்கள் பக்தி பரவசம்..!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 10:30 am

திருச்ச : ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்விற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொடி படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 5.05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.

இன்று முதல் அடுத்து வரும் 10 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29ஆம் அன்று நடைபெற இருக்கின்றது. மே 1ஆம் தேதி ஆளும் பல்லக்கு உடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ