குடல் புழு நோயால் சுருண்டு விழுந்த யானை : உயிரை காப்பாற்ற வனத்துறை எடுத்த முடிவு…சில மணி நேரங்களில் நடந்த அதிசயம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2022, 11:19 am
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் குடல் புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட பாலப்படுகை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டனர்,
இதையடுத்து தாளவாடி வனச்சரகர் சதீஷ்க்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானை குடல் புழு நோயால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக கால்நடை மருத்துவர் சதாசிவம் தெரிவித்தார்.
வனப் பகுதிக்குள் சென்ற யானையை தனிக்குழு அமைத்து யானையின் நிலை குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.