காசு, பணம் வந்தால் உயர்சாதி ஆகிவிடுவாரா இளையராஜா..? தபேலா அடிக்கிறவர்கள் எல்லாம் இசையமைப்பாளரா..? EVKS இளங்கோவன் சர்ச்சை பேச்சு…!!
Author: Babu Lakshmanan22 April 2022, 10:18 am
பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய இசைஞானி இளையராஜா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் “நீட்” தேர்வு மற்றும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான பிரச்சாரப் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று ஈரோட்டில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, தபேலா அடிப்பவனெல்லாம் இசைஞானி ஆகமுடியாது என்றும், காசு வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது என்று அவர் கடுமையாக பேசிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :- தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கின்றார்கள். கேட்டால், இசையிலே நான் மன்னன் என்று. இசையிலே மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கின்றவர்கள் எல்லாம் இசையமைப்பாளராக ஆகிவிட முடியாது.
உணவிற்கு வழியில்லாமல், வறுமைக்கோட்டிற்குக் கீழே இருந்த நேரத்தில், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர்கள். பணமும், புகழும் வந்தவுடன், அவர்கள் தங்களை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொள்கின்றார்களே, இது என்ன நியாயம்?
யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். ராஜாவாம், இளையராஜாவாம். அவருக்கு வயது கிட்டத்தட்ட 80 ஆகப் போகிறது. கேட்டால், இளைய ராஜா. ஆரம்பத்தில் தொழிலாளிகள் நலம் பாடிய நீ – பணமும், புகழும் வந்தவுடன், இன்னமும் பேராசையின் காரணமாக, பணமும், புகழும் வரவேண்டும் என்கின்ற காரணத்திற்காக, நீ திடீரென்று பக்திமான் ஆகிவிட்டாய்; பக்திமான் ஆனது தவறு என்று சொல்லமாட்டேன்; அது உங்கள் விருப்பம். நான் எப்படி உன்னுடைய கருத்துக்கு மரியாதை கொடுக்கின்றேனோ, அதேபோல், நீ என்னுடைய கருத்துக்கு மரியாதைத் தரவேண்டும்.
அதைவிட்டுவிட்டு, மோடி, அம்பேத்கரைப் போன்றவர் என்று சொன்னால், என்ன அர்த்தம்? யார் அம்பேத்கர்? அம்பேத்கர் செய்த தியாகம் என்ன தெரியுமா..? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் அம்பேத்கர் என்பதோடு மட்டுமல்ல, இந்த இந்திய நாட்டிற்கே அரசமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அம்பேத்ரை எப்படி நீ மோடியோடு ஒப்பிட்டுப் பேசலாம்!
ஓர் அரசிடம் உதவிப் பெற்று படித்த அவர், அப்படியே மேல்நோக்கிப் போயிருக்கலாம்; ஆனால் வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு, இழிநிலையில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கடைசி வரை உழைத்தாரே, அவரை எப்படி நீ மோடி யோடு ஒப்பிட்டுப் பேசலாம்! கேடித்தனங்கள் செய்வதற்கு ஓர் அளவில்லையா இந்த நாட்டில்? இதை எப்படி நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியும். நாளைக்கு என்ன சொல்வார்கள்? மோடியும், பெரியாரும் ஒன்று; இரண்டு பேரும் தாடி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், என்ன நியாயம்?
உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு. முசோலினியோடு மோடியை ஒப்பிடு. அமித்ஷாவை, குள்ளக்கத்திரிக்காயோடு ஒப்பிடு. வேண்டாம் என்று யார் சொன்னார்கள்.
ஆனால், இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்களை நீங்கள் அசிங்கம் செய்யவேண்டும் என்று நினைத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது?இளையராஜாவிற்கு ஒருமுறை அடிபட்டால் போதாது என்று நினைக்கின்றேன்.
இதேபோல்தான், ‘பெரியார்’ திரைப்படத்திற்கு இசை யமைக்கமாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா. சங்கராச்சாரியார் என்று நினைப்பு அவருக்கு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம், என்று கூறினார்.
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.