முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…தமிழகத்தில் மீண்டும் வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள்…!!
Author: Babu Lakshmanan22 April 2022, 12:36 pm
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2வது அலைகளால் சிதைந்து போன இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் செத்தும் மடிந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்தது. அதனால் கொரொனா கால ஊரடங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் முழுவதுமாய் நீக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தினசரி 25க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வந்தன. ஆனால், நேற்று முன்தினம் 31ஆகவும், நேற்று 39 ஆகவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- மிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளது, என தெரிவித்துள்ளார்.