முதலமைச்சர் வீட்டு முன்பு சாலிசா பாட முயன்ற எம்பி – எம்எல்ஏ தம்பதி கைது… இருவரையும் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
Author: Babu Lakshmanan25 April 2022, 8:22 pm
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் வீட்டின் முன்பு சாலிசா பாட முயன்ற எம்பி மற்றும் அவரது எம்எல்ஏ கணவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நவ்நீத் ராணா. இவர் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியின் எம்பியாக உள்ளார். இவரது கணவர் ரவி ராணா , பத்ரேனா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.இருவரும் சுயேச்சை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாவர்.
இவர்களுக்கும் ஆளும் சிவசேனா கட்சிக்கும் மோதல் போக்கே இருந்து வருகிறது. மகாராஷ்டிரா பிரச்சனைகளை தீர்க்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அனுமன் சாலிசா பாடலை படிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இதனை ஏற்காத நிலையில், மும்பையில் உள்ள முதலமைச்சரின் வீட்டின் முன்பு எம்எல்ஏ ராணாவும், அவரது மனைவியான எம்பி நவ்நீத்தும் அனுமன் சாலிசா பாடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி, இன்று இவர்களுடைய ஆதரவாளர்கள் முதலமைச்சர் உத்தரவ் தாக்கரே வீட்டு முன்பு அனுமன் சாலிசா பாட தொடங்கினர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் சிவசேனா தொண்டர்கள் அனுமன் சாலிசா பாடியோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அதேவேளையில், நவ்நீத் ராணாவும், ரவி ராணாவும் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி, சிவசேனா தொண்டர்கள் அவர்களுடைய வீட்டு முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, பொது அமைதியை குலைக்கும் நோக்கில் செயல்படுவதாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நவ்நீத் ராணாவை, ரவி ராணாவையும் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.