எங்கே போனது மனிதம்? இறந்த மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை : தனியார் ஆம்புலன்ஸ் தரகர்கள் அத்துமீறலால் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2022, 12:10 pm

ஆந்திரா : தனியார் மருத்துவமனையில் வெளி ஆம்புலன்சுகளை உள்ளே நுழைய வடாமல் தடுத்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் மகனின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் தந்தை கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் கொண்டுரு பகுதியை சேர்ந்தவர் நரசிம்மலு மற்றும் ரமனஅம்மா தம்பதியினர். இவர்களுடைய மகன் ஜேசவா (வயது 10) .

10 வயது மகனுக்கு சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக திருப்பதி ருயா அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் ஜேசவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதைத்தொடர்ந்து உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை உறவினர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் ரூயா மருத்துவமனை வளாகத்தில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் தரகர்கள் வெளியே இருந்து வந்த ஆம்புலன்சில் உடலைக் கொண்டு செல்லக்கூடாது என ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திரும்பிச் சென்றார்.

மேலும் தங்களது ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடலை கொண்டு செல்ல 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த சிறுவனுடைய தந்தை நரசிம்மலு ஜேசவா உடலை திருப்பதியிலிருந்து கரகம்பாடி வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார்.

பின்னர் அங்கிருந்து வேறு ஆம்புலன்ஸ் வாகன உதவியுடன் உடலை சொந்த ஊரான அன்னமய மாவட்டம் கொண்டுரு பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பணம் இல்லாத ஏழை எளியோர் சடலங்களை தூக்கி சுமந்து சென்ற சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1192

    0

    0