ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி…மின்னல் வேகத்தில் காப்பாற்றிய பெண் போலீஸ்: எழும்பூர் ரயில் நிலையத்தில் திக் திக் சம்பவம்..!!(வீடியோ)
Author: Rajesh26 April 2022, 12:38 pm
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஏ.சி. பெட்டியில் தவறுதலாக ஏறிய பயணி ஒருவர் அதிலிருந்து இறங்கி பொது பெட்டியில் ஏறுவதற்காக அவசரமாக இறங்க முயன்றார்.
ரயில் கிளம்பிக்கொண்டிருக்கும்போது அவர் இறங்கியதால், எதிர்பாராதவிதமாக தவறி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மாதுரி இதை பார்த்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று அந்த பயணியை தரதரவென இழுத்து வந்து காப்பாற்றினார்.
ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆண் பயணியை பெண் போலீஸ் மாதுரி தனி ஒருவராக தரதரவென இழுத்து உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, துரிதமாக விரைந்த பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர் மாதுரிக்கு அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.