மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பும் அரசியல் பிரமுகர்? பிரசாந்த் கிஷோர் நடவடிக்கைக்கு ‘கை’ கொடுக்க வரும் தமிழக அரசியல் வாரிசு!!
Author: Udayachandran RadhaKrishnan27 April 2022, 1:46 pm
காங்கிரஸ் கட்சியில் தனக்கென தனி மரியாதையும், தனி முத்திரையும் பதித்தவர் மூத்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார். காங்கிரஸ் கட்சியை வள்ர்கக் அரும்பாடுபட்ட இவரின் மகன் ஜிகே வாசனும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அவருக்கு மத்திய அமைச்சர் பதவி, எம்பி பதவி என பல்வேறு பதிவியில் இருந்தவர். பின்னர் காங்கிரஸ் உடனான கருத்துவேறுபாடுக்கு பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய அவருக்கு ஆதரவளித்தார் ஞானதேசிகன். ஆனால் தனிக்கட்சி தொடங்கி எந்த ஒரு பிரதிபலனும் கிடைக்காமல் இருந்த அவர், அதிமுகவுக்கு ஆதரவளித்து வந்தார்.
இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்து வருகிறது. குறிப்பாக 10 வருடமாக மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாமல் திணறி வரும் காங்கிரஸ், இம்முறை பாஜகவை வீழ்த்தி பல்வேறு கட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்த நிலையில் ஜிகே வாசனை காங்கிரஸ் கட்சிக்கு இணைப்பதற்கு மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தொடர்ந்து வாசனுடன் பேசி வருகிறார். மறுபக்கம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த வாசனுக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி வழங்குவதாக பிரதமர் மோடியே நேரில் அழைத்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம், கட்சி மேடைகளில் காங்கிரஸ் மீதான தாக்குதலை கைவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக த.மா.கா மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பின்னணியில் உள்ள காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அண்மையில் ஏ.கே அந்தோணிக்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை நலம் விசாரிக்க ஜிகே வாசன் சென்றுள்ளார்.
அப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டியதன் அவசியத்தை ஏ.கே அந்தோணி வாசனிடம் விளக்கியுள்ளார்.
இந்தநிலையில் தான் ஜிகே வாசன் சமீபத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அரசியல் ரீதியான கட்சியின் இருப்பு முக்கியம் கருதியே பாஜக, அதிமுக அணியில் சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால் பாஜகவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என ஓபனாக பேசியுள்ளார்.
மேலும் இந்துத்துவத்தை மட்டுமே கொள்ளையாக கொண்டிருப்பதால் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அவர் ஓபனாக பேசியதாக த.மா.கா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் பொம்மை மாதிரி எப்படிக் கவிழ்த்தாலும் நிமிர்ந்து விடும் என்பதாலும், பி.கே காங்கிரசில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடுத்துள்ள முடிவு சரியான நடவடிக்கை என்று கூறியுள்ளதை ஜிகே வரவேற்பதாகவும் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளன.
இதனால் தான், காங்கிரஸ் பற்றி பொதுமேடைகளில் தனது கட்சி நிர்வாகிகள் தாக்கி பேசக்கூடாது என கட்டளையிட்டுள்ளதாகவும், அதன்படியே காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக அரசின் சொத்து வரி உயர்வு குறித்து த.மா.கா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் விரைவில் ஜிகே வாசன், காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியில் என்ன ரோல் என்பதை கட்சி மேலிடம் ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.