ஆளுநர் மீது திமுக அரசு கடும் தாக்கு : மோதிக்கொள்ளும் நெட்டிசன்கள்!
Author: Udayachandran RadhaKrishnan27 April 2022, 7:02 pm
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட 11 மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதால் அவருக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
ஆளுநர் தபால்காரர்
இந்த நிலையில், சென்னையில் தி.க. சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆளுநருடன் நான் பேசியது நீட் சட்ட முன் முடிவுக்கான ஒப்புதல் அல்ல. ஒப்புதல் வழங்கும் அதிகாரமும் அவரிடத்தில் இல்லை. சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாவை குடியரசுத் தலைவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றுதான் கூறினேன்.
அவர் தபால்காரர் வேலைதான் செய்யவேண்டும். அந்தத் தபால் பணியை கூட அவர் செய்ய மறுப்பது அவரது பணிக்கு அழகல்ல. அவரது செயல்பாட்டை பார்த்து இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா? இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மாநில அரசுகள் இணைந்தால்தான் இந்தியா என்பதை மத்திய அரசும் அவர்களின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்களும் உணரவேண்டும்” என்று கடுமையாக தாக்கினார்.
ஆளுநருடன் மோதல் போக்கு
முதலமைச்சரின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது. ஏனென்றால் ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான இதுபோன்ற மோதல் போக்கு ஏற்கனவே தெலுங்கானா, மேற்கு வங்காளம், கேரள மாநிலங்களிலும் உள்ளது.
இந்த நிலையில்தான் ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக ஆளுநரை வசைபாடுவதை வெளிப்படையாக காணவும் முடிகிறது.
தபால்காரர் அல்ல ஜனாதிபதியின் பிரதிநிதி
இதுபற்றி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர் தபால்காரர் அல்ல. இந்தியக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்” என தெரிவித்து இருக்கிறார்.
கல்வியாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்ரமணியசாமி இரண்டே இரண்டு வரிகளில் ஆளுநரின் பணி பற்றி குறிப்பிட்டு இருப்பது திமுகவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது, என்கிறார்கள்.
சுப்பிரமணியசாமி கடும் விமர்சனம்
ஏனென்றால் சமீப காலமாக மோடி அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அவர், தமிழக ஆளுநர் விவகாரத்தில், திமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ எதார்த்த நிலையை கூறியிருக்கிறார்.
பாஜக பிரமுகர் கடும் தாக்கு
அதேபோல் தமிழக பாஜக தொழில் நுட்ப பிரிவு அணியின் தலைவர் நிர்மல் குமார் கூறும்போது “உதய்ணா அமைச்சராக ஆளுநர் தானே பதவி பிரமாணம் செய்யவேண்டும், அப்போ அதுவும் நடக்காதா?…” என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் ஏஜெண்ட்
திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வலைத்தளவாசி ஒருவர், “ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஏஜெண்ட், வேலைக்காரர்தான். மாநில அரசின் வேலைகளையும் அவர் செய்தாக வேண்டும், இது மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசு. இவர்கள் சொல்லும் வேலையை செய்யவேண்டும், மத்திய அரசுக்கும், மாநில மக்களின் அரசுக்கும் இவர் போஸ்ட்மேன் மட்டுமே!” என சூடாக பதிவிட்டுள்ளார்.
ஆளுநரே திரும்பிப்போ
இன்னொருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரின் வேலை சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவது மட்டுமே. ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் மட்டும் முடிவு எடுக்கலாம். ஆனால் நீட் மசோதாவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் மட்டுமே! தமிழர்களை அவமதித்த ஆளுநரே திரும்பிபோ!” என்று ஆவேசமாக கொந்தளித்து இருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுப்பது போல ஒரு நெட்டிசன், “யாரு தபால்காரர்?… அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் ஆளுநரிடம் வழங்குகிறது. மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் முதலமைச்சரை ஆளுநர்தான் நியமிக்கிறார்” என்று நையாண்டி செய்துள்ளார்.
அப்ப தெரியலயா? இப்ப மட்டும் தெரியுதா?
இன்னொருவரோ “சென்னாரெட்டி கிட்ட மனு கொடுத்தது யாரு, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கூறி ரோசய்யாவிடம் மனு கொடுத்தது யாரு? ஆட்சி டிஸ்மிஸ் செய்ய கூறி வித்யாசாகரிடம் மனு கொடுத்தது! ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை விடுத்தது பன்வாரிலாலிடம் மனு கொடுத்தது! அப்பொழுது எல்லாம் போஸ்ட்மேன்தான் ஆளுநர் என்று தெரியலையா ” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மற்றொரு நெட்டிசன், “மாநில நிர்வாகத்தில் உண்மையான அதிகாரம் பெற்றவர் ஆளுநர்தான். அவருடைய கையெழுத்து இல்லாமல் மாநிலத்தில் எந்த நிர்வாக செயல்பாடும் நடைபெறாது. இந்த நாட்டிற்கு அரசியல் அமைப்பை உருவாக்கி கொடுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களை இதன் மூலம் அவமானம் செய்து வருகிறீர்கள்” என கோபமாக பதிவிட்டுள்ளார்.
இப்படி ஆளுநருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் இரு தரப்பினர் மோதிக்கொள்வது நீட் பிரச்சினையின் வீரியத்தை காட்டுகிறது.
அரசியல் நோக்கர்கள் கருத்து
இந்த விவகாரம் குறித்து, டெல்லியில் சட்ட வல்லுநர்களும் அரசியல் நோக்கர்களும் கூறும்போது,” நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு
அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது என்பது உண்மை. ஏனென்றால் 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தனது, தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று உறுதியாக கூறியிருந்தது.
ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியாகிவிட்டது. இதனால்தான் திமுக கொந்தளிக்கிறது.
நீட் நடத்த மத்திய அரசு உறுதி
ஆனால் மத்திய அரசோ, சமூக நீதியை சுட்டிக்காட்டி நீட் தேர்வை நடத்துவதில் மிக உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு பலமாக உள்ளது.
எனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தாலும் கூட அதற்கு ஒப்புதல் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வருகிற ஜூலை மாதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் தனது பதவியில் இருந்து விடைபெறும் நேரத்தில் அவர் நீட் தேர்வு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். எனவே தமிழகத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் ரவி மீது காட்டும் கோபத்தால் நீட் விவகாரத்தில் எந்த பலனையும் பெற முடியாத சூழல்தான் உருவாகும்.
ஆளுநரை தபால்காரர் என்கிறார்கள். ஆனால் அந்த கடிதத்தில் தபால்தலை ஒட்டவில்லை என்றால் அது எங்கும் போய் சேராது. அதுபோல்தான் ஏகே ராஜன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு விலக்கு கேட்கப்பட்டுள்ளது. அதில் பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதால் இந்த சட்ட மசோதாவை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு, தமிழக ஆளுநரான தபால்காரர் அனுப்பி வைக்காமலும் போயிருக்கலாம். காலதாமதம் செய்வதற்கு அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் “என்று அவர்கள் குறிப்பிட்டனர்.