இளம் காளையா இருக்கும்போது பல காளைகளை அடக்கினேன்… அமைச்சரின் கேள்விக்கு ஓபிஎஸ் ‘கலகல’ பதில்..!!
Author: Babu Lakshmanan28 April 2022, 6:18 pm
ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறீர்கள்..? என்ற அமைச்சரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்றைய நாள் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது, ஜல்லிக்கட்டு தடை செய்தது யாருடைய ஆட்சியிவ்ல என்பது குறித்த வாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர் சாமிநாதன், அதிமுக உறுப்பினர்கள் எல்லாம் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். இதுவரையில் அவர் எத்தனை காளைகளை அடக்கியுள்ளார்..? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :- இளம் வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியுள்ளேன். திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால்தான் ஜல்லிகட்டு நடத்த முடியாமல் போனது. எனவே, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் பிறகு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று அதிமுக ஆட்சியில் ஜல்லிகட்டிற்க்கு அனுமதி வாங்கினோம். இதன் காரணமாகவே, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிகட்டு தடையின்றி நடந்து வருகிறது, எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தொகை, காங்கிரஸ் – திமுக ஆட்சியில் ஜல்லிகட்டை தடை செய்யவில்லை என்றும், பீட்டா மற்றும் பூளுகிராஸ் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைபெற்றதாகவும் அவர் கூறினார்.