கழிவு மீன்களை ஏற்றி வந்த கேரள கண்டெய்னர் லாரிகள்.. சிறைபிடித்து போலீசிடம் ஒப்படைத்த தக்கலை மக்கள்…!

Author: Babu Lakshmanan
28 April 2022, 6:43 pm

கன்னியாகுமரி: தக்கலையில் கேரளாவில் இருந்து கழிவு மீன்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை போலீசார் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து மீன் கழிவுகள், இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் ஏற்றி வந்து, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் சட்ட விரோதமாக கொட்டி செல்வது வாடிக்கையான நிலையில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.

இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி – கேரளா எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சோதனை சாவடி காவலர்களின் கண்காணிப்பையும் தாண்டி, தொடர்ந்து கழிவுகள் கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு தக்கலை வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த கேரள பதிவெண் கொண்ட 2 கண்டெய்னர் லாரிகள் அதிக துர்நாற்றத்துடன் செல்வதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அந்த இரண்டு லாரிகளையும் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன் போலீசாருக்கு தகவலளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் டிரைவர் அஜிஸ் மற்றும் ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த கண்டெய்னர் லாரிகள் இரண்டும் கேரளா மாநிலம் கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கழிவு மீன்களை ஏற்றி கொண்டு, தூத்துக்குடி வாகைகுளம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வந்ததும், கழிவு மீன் என்பதால் வாகனத்தில் இருந்து கழிவு நீர் சாலையில் கொட்டி துர்நாற்றம் வீசுவதும் தெரியவந்தது

இதனையடுத்து தக்கலை போலீசார் அந்த வாகனங்களின் மீது கழிவு மீன்களை ஏற்றி சட்ட விரோதமாக தமிழகத்தில் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.

  • Shruti spoke boldly after the leaked video அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!