அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டது மிகச்சரியானது.. அடித்துச் சொல்லும் நடிகர் விஜய்யின் தந்தை…!!! (வீடியோ)
Author: Babu Lakshmanan29 April 2022, 5:01 pm
அண்மையில் ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் வெளியிட்ட ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும், அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள், என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. இருப்பினும், தனது சொந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகள் இடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே அடுத்தடுத்து கருத்துக்களை கூறினர். பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று திராவிடக் கட்சிகள் கங்கனம் கட்டி வரும் நிலையில், தமிழ் திரையுலக பிரபலங்களின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் திமுக எந்தவிதமான கருத்தையோ, கண்டனத்தையோ பதிவு செய்யவில்லை.
இப்படியிருக்கையில், பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியதில் எந்த தவறுமில்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஆன்லைன் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது :- எனக்கு தெரிந்ததைத்தான் பேசுவேன். தெரியாததை தெரிந்தது போல நடிக்கத் தெரியாது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். அதேபோல, திரையுலகம் பற்றி பேசவில்லை. மோடியை பற்றி கேட்டால், அவரும் மக்களும், நாடும் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார்.
இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை நல்ல எண்ணத்தில் செயல்படக் கூடியவர் பிரதமர் மோடி. தனிப்பட்ட முறையில், அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிடுவதில் எந்த தவறுமில்லை, என்றார்.
இது பற்றி அரசியல் நோக்கர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக அதீத வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை திராவிட இயக்கத் தலைவர்களே ஒப்புக் கொண்டு உள்ளனர். இப்படியிக்கையில், வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று எஸ்ஏ சந்திரசேகரின் பேச்சு அமைந்துள்ளது. ஏற்கனவே, இளையராஜாவின் கருத்தை ஜீரணிக்க முடியாமல் திராவிட இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் தவித்து வருகின்றன.
இந்த நிலையில், எஸ்ஏ சந்திரசேகர் இப்படி கூறியிருப்பது பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாகத்தான் உள்ளது. இத்தனை நாட்கள் வாய்திறக்காத பிரபலங்கள் கூட பாஜகவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருவது, அக்கட்சிக்கு பாசிட்டிவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம், திராவிட கட்சிகளின் இயலாமையா.. அல்லது பாஜகவின் வளர்ச்சியா..? என்பது போக போக தெரிய வந்துவிடும்.
அதேவேளையில், எஸ்ஏ சந்திரசேகருக்கு அரசியல் எண்ணம் என்பது, விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அவர் பதிவு செய்த போதே வெளிப்பட்டு விட்டது. ஒருவேளை, தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னோட்டமாக, அவர் இந்தக் கருத்தை சொல்லியிருப்பாரோ..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எஸ்ஏ சந்திரசேகரின் இந்தக் கருத்து திராவிடக் கட்சிகளை
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது ஒருபுறம் இருந்தாலும், அவரது மகனும் நடிகருமான விஜய் இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பார்..? என்பது தெரியவில்லை, எனக் கூறுகின்றனர்.